சென்னை: இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பரங்குன்றத்தில் விளக்கேற்றுவது என்பது தமிழக இந்துக்களின் அடிப்படை உரிமை உணர்வு. இது மறுக்கப்பட்டபோதுதான் அவர்கள் வெகுண்டெழுந்தார்கள். இந்துக்களின் இந்த இயல்பான உணர்வை ஏதோ மதக்கலவரம் போலவும், பிரிவினையை ஏற்படுத்தும் என்பதைப் போலவும் ஒரு தோற்றத்தை அரசு ஏற்படுத்தியது.
நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், சிறுபான்மையினரை பாதுகாக்கிறோம் என்ற போர்வையில் இந்துக்களை முற்றிலுமாக புறந்தள்ளினார்கள். தமிழக மக்கள் அதனால் அவர்களை புறந்தள்ளினார்கள்.
திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை அணுகி இருப்பது, நீங்கள் நீதிமன்றம் செல்கிறோம் என்று நினைக்கிறீர்கள்; ஆனால் இந்துக்களுக்கான நீதி மறுக்கப்படுகிறது என்பதை தமிழக அரசு உணர வேண்டும்.
இந்த அரசு உடனே இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பூரண சந்திரன் என்ற தம்பி அதற்காகவே உயிரை மாய்த்திருக்கிறான் என்பதையும் மனதில் கொண்டு, திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தை ஒரு சட்டப் பிரச்சினையாக மாற்றாமல், மதப் பிரச்சினையாகவும் மாற்றாமல், உணர்வுபூர்வமான உரிமை என்ற விதத்தில் அதற்கு அனுமதி அளித்து அதை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
