37 லட்சம் பக்தர்கள் பயணித்த நிலையில் சார்தாம் யாத்திரையில் இதுவரை 198 பேர் பலி: உத்தரகண்ட்டில் சோகம்

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் நடப்பு சீசனில் சார் தாம் புனித யாத்திரை மேற்கொண்ட பக்தர்களின் எண்ணிக்கை 37 லட்சத்தைக் கடந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் சார் தாம் புனித யாத்திரை தொடங்கி நடைபெற்று வருகிறது. கேதார்நாத் கோயில் ஏப்ரல் 22ம் தேதியும், பத்ரிநாத் கோயில் ஏப்ரல் 23ம் தேதியும் திறக்கப்பட்டன. கேதார்நாத் கோயிலுக்கு 12.61 லட்சம் பக்தர்களும், பத்ரிநாத் கோயிலுக்கு 11.67 லட்சம் பக்தர்களும் வருகை தந்துள்ளனர்.

கங்கோத்ரிக்கு 6.17 லட்சம் பேரும், யமுனோத்ரிக்கு 5.83 லட்சம் பேரும்,  ஹேம்குண்ட் சாஹிப்பிற்கு 1.05 லட்சம் பக்தர்களும் சென்றுள்ளனர். கவுமுக் பனியாற்றுக்கு 5,795 பக்தர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த சீசன் தொடங்கியதில் இருந்து இதுவரை மொத்தம் 3.54 லட்சம் வாகனங்கள் யாத்திரை பாதைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தின் தரவுகளின்படி, கடந்த வியாழக்கிழமை வரை மொத்தம் 37.35 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

இதற்கிடையே, யாத்திரையின் போது உயிரிழந்த பக்தர்களின் எண்ணிக்கை 198 ஆக அதிகரித்துள்ளது. இதில் 195 பேர் உடல்நலக் குறைவு மற்றும் உடல்நல பாதிப்பு காரணமாகவும், 3 பேர் இயற்கை காரணங்களாலும் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக கேதார்நாத்தில் 95 பேர் உயிரிழந்துள்ளனர். பத்ரிநாத்தில் 59 பேரும், யமுனோத்ரியில் 26 பேரும், கங்கோத்ரியில் 18 பேரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: