×

நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலத்தில் குப்பைகளை மூட்டையாக போடும் அவலம்

நெல்லை : நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலத்தில் குப்பைகளை மூட்டையாக கட்டிபோட்டு செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நெல்லை மாநகர பகுதியில் ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க வேண்டி வடக்கு – தெற்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டது.

இதைதொடர்ந்து வண்ணார்பேட்டையில் சந்திப்பு – பாளை பகுதியை இணைக்கும் சாலையும், வடக்கு – தெற்கு புறவழிச்சாலை சந்திக்கும் பகுதியில் ரவுண்டானா அமைக்கப்பட்டது.

இந்த ரவுண்டானாவில் புறவழிச்சாலையில் இருந்து எதிர், எதிர் பயணிக்கும் வாகனங்கள், அரசு பஸ்களும், சந்திப்பு பஸ்நிலையம், பாளை பஸ்நிலையத்தில் இருந்து வரும் வாகனங்களும் வண்ணார்பேட்டை ரவுண்டானாவில் சிக்கி திணறி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து ரவுண்டானாவின் சுற்றளவு குறைக்கப்பட்டது. இருந்தபோதும் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து நெருக்கடி குறைந்த பாடில்லை. இந்நிலையில் தான் வண்ணார்பேட்டையில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதை தொடர்ந்து பாளையில் இருந்து சந்திப்புக்கும், சந்திப்பில் இருந்து பாளைக்கும் செல்லும் வாகனங்கள் மேம்பாலத்தின் கீழ் பகுதி வழியாக இயக்கப்பட்டு வருகின்றன.

அதேநேரத்தில் புதிய பஸ்நிலையம், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை, மதுரை செல்லும் அரசு, தனியார் ஆம்னி பஸ்கள் வண்ணார்பேட்டை ரவுண்டானா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் இயக்கப்படுகின்றன.

இந்த மேம்பாலத்தின் இருபுறத்திலும் மணல் குவியல், குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் நிறைந்த மூட்டையும் கிடக்கிறது. இது பாலத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், பொதுமக்களை முகம்சுளிக்க வைக்கிறது. ஆகவே மேம்பாலத்தில் தேங்கி உள்ள குப்பைகள், மணலை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Nellai Vannarpet ,Nellai ,North-South ,Vannarpet ,Palai… ,
× RELATED முதலமைச்சர் விஜய் தலைமையில் ஜூன் 29, 30...