×

ஓசூர் வட்டாரத்தில் பரவலான மழையால் உழவு பணிகள் தீவிரம்

 

ஓசூர், ஜூன் 19: ஓசூர் பகுதியில் பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக, விவசாயிகள் உழவுப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சுற்றுவட்டாரத்தில் நடப்பாண்டு கோடைக்கு முன்னரே கடும் வெயில் நிலவியது. இதனால் நீர்நிலைகள் வறண்டு போனது. கிணறுகளில் நீர்மட்டம் தாழ்ந்து போனதால், பயிர் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் கவலையடைந்தனர். இந்நிலையில், கடந்த வாரம் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, ஓசூர் வட்டாரத்தில் உள்ள ஏரி, குளம் மற்றும் குட்டை உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும், நிலங்களில் விவசாயம் செய்வதற்கான ஈரப்பதம் இருப்பதால், ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுகா பகுதிகளில் உள்ள விவசாயிகள், பயிர் சாகுபடி பணியை துவக்கி தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக மானாவாரி பயிர்களான கேழ்வரகு, பருத்தி, கம்பு, நிலக்கடலை போன்வற்றை பயிர் செய்வோர் தங்கள் நிலங்களை உழுது தயார் செய்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கடந்த வாரம் பெய்த தொடர் மழையின் காரணமாக, வாடிய பயிர்கள் மீண்டும் துளிர் விட்டுள்ளது.
நிலங்களை உழுது, உரமிட்டு, விதை விதைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். பயிர்கள் துளிர் விடும் போது, பருவமழை கைகொடுத்தால், இந்தாண்டு மானாவாரி விளைச்சல் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்,’ என்றனர்.

Tags : Hosur district ,Hosur ,Krishnagiri district ,
× RELATED ஊத்தங்கரை அருகே அரசு பள்ளி சமையல் கூடத்தில் தீ விபத்து