தேன்கனிக்கோட்டை, ஜூன் 18: தேன்கனிக்கோட்டை அருகே கிராமத்தில் நுழைந்த ஒற்றை யானை, பலாமரங்களை முறித்து, காய்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தி சென்றதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள், அடிக்கடி உணவு, தண்ணீர் தேடி கிராமத்துக்குள் நுழைகிறது. இந்த யானைகள் விவசாயிகள் சாகுபடி செய்து அறுவடைக்கு தயாராக வைத்துள்ள பயிர்கள், காய்கறிகள், வாழை, தென்னை மரங்களை முறித்து சேதப்படுத்தி செல்கின்றன. ேமலும் காவலுக்கு செல்பவர்கள் மற்றும் அதிகாலை வயலுக்கு செல்பவர்களை தாக்கி காயப்படுத்துகிறது. பல சமயங்களில் ஒற்றை யானை தாக்கி விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் உயிரிழப்பது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் தேன்கனிக்கோட்டை அடுத்த உனிசெட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு அய்யூர் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றை யானை, பயிர்களை நாசம் செய்தது. அப்பகுதியில் விவசாய தோட்டத்தில் புகுந்த ஒற்றை யானை தக்காளி, பீன்ஸ் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியது. மேலும் விவசாய நிலத்தில் இருந்த பலா மரங்களை முறித்த யானை, அதில் இருந்த பலாப்பழத்தை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தி சென்றது. இந்த பகுதியில் தொடர்ந்து அட்டகாசம் செய்யும் ஒற்றை யானையை, வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்கு நிரந்தரமாக விரட்ட வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
