×

கூடலூர் அருகே ரேஷன் கடையை உடைத்து சூறையாடிய காட்டு யானை

 

கூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூர் அடுத்த மசினகுடி பஜார் தெப்பக்காடு செல்லும் சாலையில் மசினகுடி மசினி அம்மன் கோயில் அருகில் ரேஷன் கடை உள்ளது. இந்த ரேஷன் கடையை நேற்று நள்ளிரவு காட்டு யானை, கடை ஷட்டரை உடைத்து சேதப்படுத்தி அங்கிருந்த உணவு பொருட்களை சேதப்படுத்தியதுடன், அரிசி மூட்டையை வெளியே இழுத்து வீசி சாப்பிட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஜீப்பில் விரைந்த போலீசார் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஜீப்பின் சைரன் ஒலித்ததும் யானை அரிசி சாக்கை வாயில் கவ்வியபடி அங்கிருந்து வெளியேறியது. பின்னர் யானையை ஜீப்பில் விரட்டிச்சென்ற போலீசார் அங்கிருந்து வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.

இதேபோல் நேற்று இரவு கூடலூரை அடுத்த தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பாலம்வயல் பகுதியில் குடியிருப்புகளுக்குள் புகுந்த காட்டு யானையை அங்கிருந்தவர்கள் விரட்டியபோது வீட்டின் காம்பவுண்ட் இரும்பு கேட்டை உடைத்து கொண்டு வெளியேறியது. நகர் பகுதிகள், குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்களுக்குள் தொடரும் காட்டு யானைகள் நடமாட்டம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஊருக்குள் வரும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி கண்காணிக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Koodalur ,Masinagudi Masini Amman Temple ,Masinagudi Bazar Depakkad ,Nilagiri district ,
× RELATED கேரளாவில் பன்றி காய்ச்சல் எதிரொலி:...