×

360 எம்பிக்கள் பலத்தை பெறுவதற்காக அடுத்தடுத்து எதிர்க்கட்சிகளை உடைக்கும் பாஜ..! திரிணாமுலை தொடர்ந்து சிவசேனா, சமாஜ்வாடிக்கு குறி; முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற குறுக்கு வழி முயற்சி

புதுடெல்லி: கடந்த ஏப்ரல் மாதம் நடந்த நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியலமைப்பு திருத்த மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்தது. அப்போது நடந்த வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 298 வாக்குகளும், எதிராக 230 வாக்குகளும் கிடைத்தன. அரசியலமைப்பை திருத்த மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு 352 எம்பிக்கள் ஆதரவு தேவைப்பட்ட நிலையில் போதிய பலம் இல்லாததால் மசோதாக்களை நிறைவேற்ற முடியவில்லை.

இந்நிலையில், வரும் ஜூலை 20ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இதில் தொகுதி மறுவரை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு அரசியலமைப்பு திருத்த மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக 360 எம்பிக்கள் என்ற பெரும்பான்மை பலத்தை பெற அடுத்தடுத்து எதிர்க்கட்சிகளை பாஜ உடைத்து, எம்பிக்களை வளைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. முதலில் கடந்த ஏப்ரலில் ஆம் ஆத்மி கட்சி உடைக்கப்பட்டது. அக்கட்சியில் 10 மாநிலங்களவை எம்பிக்கள் இருந்தனர். அவர்களில் அதிருப்தி எம்பிக்கள் 7 பேர் பாஜவில் இணைந்தனர். இதே பாணியில், மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்குப் பிறகு திரிணாமுல் காங்கிரஸ் கவிழ்ந்தது. அக்கட்சியின் 20 அதிருப்தி எம்பிக்கள் புதிய கட்சி ஒன்றில் தங்களை இணைத்துக் கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

தற்போது மகாராஷ்டிராவில் சிவசேனா உத்தவ் தாக்கரே கட்சியை மீண்டும் ஒருமுறை பாஜ உடைக்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2022ல் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பல எம்எல்ஏக்கள் பிரிந்ததால் சிவசேனா கட்சியே கைமாறியது. இதைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே சிவசேனா உத்தவ் கட்சி என கட்சி பெயரை மாற்றினார். இதில், தற்போது 9 எம்பிக்கள் இருக்கும் நிலையில் 6 அல்லது 7 பேர் பாஜவுக்கு தாவுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை தடுக்க டெல்லியில் அக்கட்சியின் கொறடா தலைமையிலான எம்பிக்கள் கூட்டத்திற்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அதிருப்தி எம்பிக்கள் பங்கேற்க மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவசேனாவை தொடர்ந்து சமாஜ்வாடி கட்சிக்கும் பாஜ குறிவைத்து விட்டது. உபியில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், கட்சி தாவும் எம்பி, எம்எல்ஏக்களின் பட்டியல்களை சமாஜ்வாடி மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ், அமித்ஷாவிடம் வழங்கி இருப்பதாக எஸ்பிஎஸ்பி கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் நேற்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பாஜ தலைமையிலான என்டிஏ கூட்டணியில் எஸ்பிஎஸ்பி கட்சி அங்கம் வகிக்கும் நிலையில், முந்தைய ஊழல் புகாரில் பிடி நெருக்குவதால் சமாஜ்வாடி கட்சியில் பலரும் பாஜவுக்கு தாவ தயாராகி விட்டதாக ராஜ்பர் கூறி உள்ளார்.

இது தவிர தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா ஆகிய தென் மாநிலங்களின் எதிர்க்கட்சிகளின் ஆதரவை திரட்டவும் பாஜ முயற்சித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரே நாடு ஒரே தேர்தல் என தனது நீண்டகால கொள்கைகளை அமல்படுத்த, அடுத்தடுத்து எதிர்க்கட்சிகளை பாஜ உடைத்து எம்பிக்களை வளைப்பது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமித்ஷா நோக்கம் நிறைவேறாது: காங்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று தனது எக்ஸ் பதிவில், ‘‘தொகுதி மறுவரையறை மசோதாக்களை நிறைவேற்ற முடியாமல் போனதால் மக்களவையில் ஏற்பட்ட அவமானத்தை ஈடுசெய்யவே, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா எதிர்க்கட்சிகள் மீதான தாக்குதலையும் இந்திய ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் நடவடிக்கையையும் தீவிரப்படுத்தி இருக்கிறார். அவரது இத்தகைய கீழ்த்தரமான நடவடிக்கைகளுக்கு எந்த எல்லையும் இல்லை. ஆனால் அவரது இறுதி நோக்கம் நிறைவேறாது’’ என்றார்.

அறமற்றது சட்டவிரோதமானது
மாநிலங்களவை எம்பி கபில் சிபல் நேற்று தனது எக்ஸ் பதிவில், ‘‘தேர்தல்கள் எதற்கு? ஒரு கட்சியின் சின்னம் உங்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியிருக்கும்போது, எப்படி மற்றொரு சின்னத்தைக் கொண்ட வேறொரு கட்சியில் இணைய முடியும்? அரசியலமைப்பு சட்டத்தின் எந்தவொரு கோட்பாடும் இதை அனுமதிக்காது. இது அறமற்றது, சட்டவிரோதமானது, அரசியலமைப்புக்கு முரணானது. இனி நீதிமன்றத்தின் கையில்!’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அகிலேஷ் யாதவ் மறுப்பு
சமாஜ்வாடி கட்சியில் விரைவில் பிளவு ஏற்படக் கூடும் என்ற உபி அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் கருத்து குறித்து பதிலளித்த சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், ‘‘சலுகைகள் மற்றும் நெருக்கடிகள் மூலம் கட்சித் தாவல்களைத் தூண்டும் வரலாறு பாஜவுக்கே உண்டு. பல கட்சிகளை உடைப்பதில் பாஜ முன்பு வெற்றி பெற்றுள்ளது. ஆனாலும் இப்போது சமாஜ்வாடி கட்சி வலுவாகவே உள்ளது’’ என்றார்.

எம்பிக்களின் விலை ரூ.50 கோடி
சிவசேனா உத்தவ் அணியின் மாநிலங்களவை எம்பி சஞ்சய் ராவத் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘மகாராஷ்டிராவை சேர்ந்த சில எம்பிக்களுக்கு ரூ.50 கோடி வரை பணம் தருவதாக ஆசை காட்டப்பட்டுள்ளது. முன்பணமாக அவர்களுக்கு ரூ.15 கோடி தருவதாக கூறி உள்ளார்கள். 2022ல் நடந்தது போன்ற பிளவை மீண்டும் ஏற்படுத்த முயற்சித்தால், மகாராஷ்டிர மக்களும் சேனா தொண்டர்களும் அதிருப்தியாளர்களை மன்னிக்க மாட்டார்கள்’’ என்று அவர் எச்சரித்தார். சிவசேனா உத்தவ் கட்சிக்கு 9 எம்பிக்கள் இருக்கும் நிலையில், டெல்லியில் சஞ்சய் ராவத்துடன் 3 எம்பிக்கள் மட்டும் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிருப்தி எம்பிக்கள் சபாநாயகருடன் சந்திப்பு
சிவசேனா உத்தவ் கட்சி எம்பிக்கள் மக்களவை சபாநாயகரை நேற்று சந்தித்த நிலையில், அக்கட்சியின் அதிருப்தி எம்பிக்கள் குழுவும் சபாநாயகர் ஓம் பிர்லாவை நேற்று சந்தித்தது. அப்போது தங்களுக்கு 6 எம்பிக்கள் ஆதரவு இருப்பதாக அவர்கள் தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன. இன்றைய கூட்டத்தின் மூலம் அனைத்தும் தெளிவாகி விடும் என சஞ்சய் ராவத் கூறி உள்ளார்.

Tags : BJP ,Trinamool ,Shiv Sena ,Samajwadi Party ,New Delhi ,Union government ,
× RELATED தமிழ்நாட்டில் 151 மருத்துவ மேற்படிப்பு...