×

ரூ.20 லட்சத்த ஆட்டைய போட்டவருக்கு ஆதரவாக மிரட்டும் தவெக எம்எல்ஏ தந்தை: தொழிலதிபர் பரபரப்பு புகார்

கோவை: கோவையில் ரூ.20 லட்சம் அட்வான்ஸ் தொகையை திரும்ப கொடுக்காதவர்களுக்கு ஆதரவாக தவெக எம்எல்ஏ தந்தை மிரட்டுவதாக தொழிலதிபர், கோவை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார். நாகர்கோவிலை சேர்ந்தவர் அமர்நாத் (46). இவர், தாது மணல் பிரித்தெடுக்கும் இயந்திரம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இவர், நேற்று கோவை எஸ்பி அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.

அதன்பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நான் கடந்த ஆண்டு எனது நிறுவனத்தை கோவையில் தொடங்க நினைத்து இடம் தேடினேன். அப்போது, எனக்கு தெரிந்தவர் மூலமாக வேலாந்தாவளம் ரோட்டில் உள்ள வீரப்பனூரில் ஒரு இடம் வாடகைக்கு இருப்பதாக அறிந்தேன். இதனையடுத்து நான் அந்த இடத்தின் உரிமையாளர்கள் ஸ்ரீ வெங்கடேஷ் ஷியாம் குமார் மற்றும் அவரது தந்தை ரங்கநாதன் ஆகியோரை சந்தித்து வாடகைக்கு கேட்டபோது, ரூ.20 லட்சம் அட்வான்ஸ் தொகை மற்றும் ரூ.2 லட்சம் மாத வாடகை பேசப்பட்டது.இந்த இடத்தில் 24 ஆயிரம் சதுரடி காலி ஷெட்டாகவும், மீதமுள்ள 30 ஆயிரம் சதுரடி காலி இடமாகவும் இருந்தது.

இந்நிலையில், கடந்த 5-9-2025ம் ஆண்டு ரூ.20 லட்சத்தை அவர்களது வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தேன். ஆனால், அந்த இடத்திற்கு மின் இணைப்பு காலாவதியாகி இருந்தது. அதனை 15 நாளில் சரி செய்து கொடுத்து விடுவதாக உரிமையாளர்கள் தெரிவித்தனர். ஆனால், மின் இணைப்பு பெற்று தரவில்லை. இதனைத்தொடர்ந்து கடந்த 31-11-2025ம் ஆண்டு நாங்கள் இடத்தை காலி செய்வதாக கூறி அட்வான்ஸ் தொகை ரூ.20 லட்சத்தை திரும்ப கேட்டோம். தராமல் காலம் தாழ்த்தினர். செல்போன் அழைப்பை ஏற்பதில்லை. இதற்கிடையே நான் அந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா மற்றும் உபகரணங்களை திருடி விட்டதாக ஒரு பொய்யான புகாரை கேஜி சாவடி காவல் நிலையத்தில் அளித்தனர்.

போலீசாரும் என்னை குற்றவாளி போல் விசாரணை செய்து வருகின்றனர். இதற்கு சிங்காநல்லூர் தவெக எம்எல்ஏ ஸ்ரீ கிரி பிரசாத்தின் தந்தை சிவசண்முகம் உடந்தையாக உள்ளார். அவர் அரசியல் பின்புலத்தை வைத்து கொண்டு மிரட்டுகிறார். எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனது பணம் ரூ.20 லட்சத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Thaveka MLA ,Coimbatore ,Coimbatore District SP ,Amarnath ,Nagercoil ,
× RELATED வீட்டுமனை அளவீடுக்கு ரூ.14,000 லஞ்சம் சர்வேயர் கைது