துபாய்: அமெரிக்கா-ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை மறுதினம் கையெழுத்தாக உள்ளது. இதற்காக ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இறுதி ஒப்பந்தத்தில் லெபனான் உள்ளிட்ட அனைத்து முனைகளிலும் போர் நிறுத்தப்பட வேண்டுமென ஈரான் விரும்புகிறது. ஆனால் இஸ்ரேலுக்கு தனிப்பட்ட முன்னுரிமைகள் இருப்பதால் தேவைப்படும் காலம் வரை லெபனானில் உள்ள பாதுகாப்பு இடைவெளிப் பகுதிகளில் தொடர்ந்து நீடித்திருப்பதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறி உள்ளார். இது, ஈரானின் கோரிக்கைகளுக்கு முரணாக உள்ளது. மேலும் இறுதி ஒப்பந்தத்தில் லெபனான் விவகாரம் இடம் பெற்றுள்ளதா என்பது குறித்து அமெரிக்காவும் தெளிவாக எதையும் கூறவில்லை.
இது குறித்து, வெளிநாட்டு தூதர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ‘‘ லெபனான் மீது இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதல்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறும் செயலாகவே எங்களால் கருதப்படும்’’ என்றார்.
இதற்கிடையே, பிரான்சில் ஜி7 உச்சி மாநாட்டின் இடையே நேற்று பேட்டி அளித்த அதிபர் டிரம்ப் கூறியதாவது:
ஈரானுடனான ஒப்பந்தத்தின் திட்டமிடப்பட்ட 2ம் கட்டத்தை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள் எளிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். ஈரானில் தற்போது பகுத்தறிவுடன் செயல்படும் தலைமை இருக்கிறது. ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்காது என்பதுதான் ஒப்பந்தத்தின் முக்கிய நிபந்தனை. அது தெளிவாக கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா இல்லாவிட்டால் இஸ்ரேல் இருந்திருக்காது. நான் இல்லாவிட்டால் இஸ்ரேல் இருக்காது. எனவே லெபனான் விவகாரத்தில் இஸ்ரேல் பிரதமர் அதிக பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றார்.
எதன் விலையும் உடனே குறையாது
அமெரிக்கா-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து, மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய் விநியோகம் மீண்டும் சீராகி உள்ளது. ஆனாலும், இப்போரால் ஏற்பட்ட பாதிப்புகளை தொடர்ந்து விலை உயர்ந்த எரிபொருள், மளிகை பொருட்கள், விமான கட்டணம் போன்றவற்றின் விலை உடனடியாக குறைய வாய்ப்பில்லை என அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஈரானில் முதலீடு செய்ய மாட்டோம்
இறுதி ஒப்பந்தம் எட்டப்பட்ட உடன் ஈரானில் 300 பில்லியன் டாலர் (ரூ.28.5 லட்சம் கோடி) முதலீடுகளை அமெரிக்கா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதன் மூலம் போரால் ஈரானில் ஏற்பட்ட சேதங்கள் சரி செய்யப்படும். இதுதொடர்பான அம்சங்கள் இறுதி ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இதனை அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தார். இதுதொடர்பாக அவர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘நாங்கள் ஈரானில் எந்தப் பணத்தையும் முதலீடு செய்யவில்லை. இதுதொடர்பாக பரவிய வதந்தி அபத்தமானது’’ என்றார்.
