×

நண்பர்களுடன் `கள்’ குடித்த ஏட்டு ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம்

 

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் நண்பர்களுடன் சேர்ந்து ஏட்டு கள் குடித்த போட்டோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், நிர்வாக காரணங்களுக்காக அவரை மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட எஸ்பி பிரசன்னகுமார் உத்தரவிட்டார். தூத்துக்குடி மாவட்டம் செம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (37). இவர் நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.

இவர் ஏற்கெனவே இந்த போலீஸ் ஸ்டேஷனில் தனிப்பிரிவிலும் பணியாற்றியவர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஏட்டு முருகன் மூலக்கரைப்பட்டி விலக்கு அருகேயுள்ள ஒரு இடத்தில் நண்பர்களுடன் சேர்ந்து 5 லிட்டர் கேனில் இருந்த கள் பானத்தை அப்படியே குடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அங்கிருந்த அவரது நண்பர்கள் செல்போனில் போட்டோ எடுத்துள்ளனர். இந்த போட்டோக்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவத் துவங்கியது.

இதனையறிந்த நெல்லை மாவட்ட எஸ்பி பிரசன்னகுமார் இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தருமாறு போலீஸ் உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து நிர்வாக காரணங்களுக்காக ஏட்டு முருகன் நெல்லை மாவட்ட ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து நெல்லை எஸ்பி உத்தரவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மேல் விசாரணை நடந்து வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Nella ,SP ,Prasanna Kumar ,Champur ,Tuthukudi District ,
× RELATED எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த...