சென்னை: தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் தொடர் பாலியல் குற்றங்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் மனைவியும், சமூக ஆர்வலருமான லதா ரஜினிகாந்த் வேதனையுடன் பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி:
நாம் அனைவரும் மொபைல் போன் போன்ற வெவ்வேறு விஷயங்களில் பிசியாக இருப்பதால், ஆக்கப்பூர்வமான காரியங்களில் குறைவாக இருக்கிறோம். இந்த சமுதாயம், மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான உணவு, பாதுகாப்பு போன்ற விஷயங்களில் ஆக்கப்பூர்வமான செயல்களை செய்ய வேண்டும். சிலர் தங்களது அன்றாட வாழ்க்கைக்கு தேவையான உணவு மற்றும் பாதுகாப்புக்காக கஷ்டப்படுகின்றனர். இவை எதிலும் ஈடுபடாதவர்கள்தான் பாலியல் குற்றங்கள் போன்ற விஷமத்தனமான காரியங்களில் ஈடுபடுகின்றனர். பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமான விஷயமாக இருக்கிறது. இளைஞர்களின் சக்தி அனைத்தையும் நல்ல காரியங்களுக்காக செலவழிக்கும் கலாச்சாரம் வளர வேண்டும். பாதுகாப்பு என்பது நமது அனைவருடைய பொறுப்பாகும்.
பாதிக்கப்பட்ட குழந்தை எப்படியெல்லாம் துடித்திருக்கும்? இந்த சமுதாயத்தில் என்னை காப்பாற்ற யாரும் இல்லையா என்று அந்த குழந்தை யாரிடம் கேட்கும்? பெற்றோரின் கவனக்குறைவும், அலட்சியமும், பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் எடுக்காததும்தான் குழந்தைகள் இதுபோன்ற பாலியல் துன்புறுத்தலில் சிக்கி சீரழிந்து போவதற்கு முக்கிய காரணமாகும். ஒரு குழந்தை பாதித்தாலும் நமது சமுதாயத்துக்கு அது நல்லதல்ல. ஆதரவற்ற குழந்தைகள், பாதிக்கப்பட்ட குழந்தைகள், குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட குழந்தைகள், காணாமல் போன குழந்தைகள் என்றிருந்த நிலை மாறி, இப்போது யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் குழந்தையை தூக்கிக்கொண்டு சென்று நாசம் செய்யக்கூடிய மோசமான சமுதாயத்தில் நாம் இருக்கிறோம்.
