×

அமெரிக்காவின் உத்தரவுகளுக்கு மோடி கீழ்ப்படிகிறார்: ராகுல் காந்தி சாடல்

புதுடெல்லி: பிரதமர் மோடி அமெரிக்காவின் உத்தரவுகளுக்கு கீழ்படிகிறார் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். ஓமன் துறைமுகத்துக்கு அருகே எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க போர் விமானம் தாக்கியதில் 3 இந்திய மாலுமிகள் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.ஹோர்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் மீது ஈரான் ஆளில்லா விமான தாக்குதல்களை நடத்தியதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.

ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ஜேசன் மீக்சை வரவழைத்து இந்தியர்கள் பணிபுரியும் வர்த்தக கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து கவலை தெரிவித்தது.இத்தகைய தாக்குதல்கள் நியாயமற்றவை என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவுடம் ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் கவலை தெரிவித்தார். அதற்கு மார்க்கோ ரூபியோ அமெரிக்க வெளியுறவுத் துறையின் உத்தரவுபடி, அமெரிக்க முற்றுகையை மீறுவதும், ஈரானிய எண்ணெயின் சட்டவிரோதக் கடத்தலும் பொறுத்துக்கொள்ளப்படாது என்று கூறினார்.

இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிட்டுள்ளதாவது:
மோடி அரசு வாஷிங்டனுக்கு அடிபணிந்து நடந்து கொள்கிறது. அவர்களின் வார்த்தைகளைப் படியுங்கள்: ‘அமெரிக்க ராணுவ உத்தரவுகளுக்கு உடனடியாகக் கீழ்ப்படியுங்கள்’ எந்த மீறலும் ‘சகித்துக்கொள்ளப்படாது. மேலும், மோடி ஒரு கீழ்ப்படிதல் உள்ள ஊழியனைப் போலக் கேட்டு, உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிகிறார். மேலும், “சமரசம் செய்துகொண்ட ஒரு பிரதமரால்” நாட்டின் கவுரவத்தைப் பாதுகாக்க முடியாது. ஏனெனில் அவர் நாட்டை அவமதிப்பவர்களுக்குக் கட்டுப்பட்டவராகவே இருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இன்னொரு பதிவில்,ஓமனில் உள்ள துக்கம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள எம்டி செலஸ்டியல் கப்பலில் பணியாற்றும் நிஷாந்த் உயிர்தநாதன் என்ற ஊழியர் உடல் நல குறைவால் உயிரிழந்துள்ளார். அவரது உடலை இந்தியாவுக்கு எடுத்து வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் கார்கே எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில், அமெரிக்க ராணுவத்தால் 3 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டு 3 நாள் ஆகிவிட்டது. பிரதமரிடம் இருந்து இரங்கல் செய்தி எதுவும் வரவில்லை. இப்போதும் பிரதமர் மோடி மவுனம் காக்கிறார். பிரதமர் மோடி இந்தியாவின் உலகளாவிய அந்தஸ்தையும் இறையாண்மையையும் இழிவுபடுத்தி விட்டார் என்பதற்கு எந்த ஆதாரமும் தேவையில்லை என கார்கே குறிப்பிட்டுள்ளார்.

Tags : Modi ,America ,Rahul Gandhi ,NEW DELHI ,UNITED STATES ,US ,port ,Oman ,
× RELATED தவெகவில் இணைகிறார் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்?