×

மேகதாது அணை விவகாரம் தமிழகத்தின் உரிமையை விட்டு கொடுக்க முடியாது: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் உறுதி

புதுச்சேரி: பிரதமராக நரேந்திர மோடி தனது 12 ஆண்டுகால சாதனைகளை நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாக, தேசிய பாதுகாப்பு, நலத்திட்டங்கள், பெண்கள் அதிகாரம், பாரம்பரியம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய 5 முக்கிய தலைப்புகளின் கீழ் பாஜ தேசிய அளவில் பிரத்யேக சாதனைகள் குறித்த புத்தகங்கள் வெளியிடும் நிகழ்ச்சி புதுச்சேரி பாஜ அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்று புத்தகங்களை வெளியிட்டார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலனையில் உள்ளது. 1990க்கு முன்பு ஒரே நேரத்தில் சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடந்த வரலாறு உள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன் மூலம் மனித வளம் மற்றும் நிதி மிச்சப்படுத்தப்படும். ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கும்.

மேகதாது அணை விவகாரத்தில் எந்த மாநிலத்தின் நலனும் பாதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். நம்முடைய மாநில (தமிழகம்) உரிமையை நாம் விட்டுக் கொடுக்க முடியாது. மாநிலங்களுக்கு இடையே பாகுபாடு இருக்கக் கூடாது. அனைத்து மாநிலங்களுக்கு உரிமையான தண்ணீர் கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக முதலியார்பேட்டை அன்னை சிவகாமி பள்ளி வளாகத்தில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் மரக்கன்று நட்டார்.

Tags : Mekedatu Dam ,Tamil ,Nadu ,Union Minister ,L. Murugan ,Puducherry ,Narendra Modi ,BJP ,
× RELATED மதுராந்தகம் அருகே மின்வெட்டால் மூதாட்டி உயிரிழப்பு?