×

பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கிய நான்கே நாளில் பெண் போலீஸ் கூட்டு பலாத்கார முயற்சி: 100க்கு போன் செய்ததால் தப்பினார்: தவெக பிரமுகர் உள்பட 3 பேர் கைது

* தொடர் சம்பவங்களால் தமிழக மக்கள் அதிர்ச்சி

சிவகங்கை: சிங்கப்பெண் சிறப்பு அதிரப்படையை உருவாக்கிய நான்கே நாட்களில், சிவகங்கையில் பெண் போலீசை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் தமிழகமெங்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களை பாதுகாக்க சிங்கப்பெண் சிறப்பு அதிரடி தொடங்கி நான்கே நாள் ஆன நிலையில், அடுத்தடுத்துத் தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இது தொடர்பாக தவெக பிரமுகர் உள்பட 3 பேர் கைதாயினர்.

தமிழகத்தில் கடந்த மே 10ம் தேதி தவெக அரசு பொறுப்பேற்றது. அன்றைய தினம் முதல்வராக பதவியேற்ற விஜய் மூன்று முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில், பெண்கள், சிறுமிகளை பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்கும் சிங்கப்பெண் அதிரடி சிறப்பு படையை உருவாக்கும் திட்டமும் அடக்கம். ஆனால், தவெக அரசு பதவியேற்ற நாள் முதல் நாள்தோறும் கொலை, கொள்ளை, வன்முறைச் சம்பவங்கள் வரைமுறையின்றி அதிகரித்தன. சிறுமிகள், பெண்கள், மூதாட்டிகள் உள்பட பலரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர்.

இதில், குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஆளும் தவெக கட்சியை சேர்ந்தவர்களே அதிகம் கைதாகி வருகின்றனர். உச்சக்கட்டமாக சேலத்தில் தவெக பிரமுகர் 50 பெண்களை ஆபாச வீடியோ எடுத்து செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததோடு, பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்திய சம்பவம் வெளியாகி பேரதிர்ச்சியை தந்தது. ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவு பெற்ற நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடந்துள்ளன.

கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்டு கொலையான சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.இது ஒருபுறமிருக்க, ஜூன் 9ம் தேதி சென்னையில் முதல்வர் விஜய், பெண்கள், மாணவிகள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை துவக்கி வைத்தார். இதனை துவக்கி வைத்து நான்கு நாட்களே நிறைவடைந்துள்ளன.

இந்தச் சூழலில் எந்த காவல்துறையில் இருந்து சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கினாரோ, அந்த காவல்துறையிலேயே ஒரு பெண் போலீஸ் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விபரம் வருமாறு: சிவகங்கை ஆயுதப்படைப் பிரிவில் 30 வயது திருமணமான பெண் போலீஸ் பணியாற்றி வருகிறார். இவர், மானாமதுரை அருகே தூதை கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் ராபின் (28) என்பவருடன் தவறான தொடர்பில் இருந்துள்ளார்.

இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில், பெண் போலீசை ராபின் உல்லாசத்துக்கு வருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து சிவகங்கை பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டப பகுதியில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். முன்னதாக, ராபின், தனது நண்பர்களான சித்தாலங்குடி கிராமத்தை சேர்ந்த தவெக பிரமுகர் மகாராஜா (29), ஹரீஸ் (21) இருவருக்கும் செல்போனில் தகவல் தெரிவித்து திருமண மண்டபம் பகுதிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

சிறிது நேரத்தில் நண்பர்கள் இருவரும் அங்கு வந்ததை பார்த்து பெண் போலீஸ் அதிர்ச்சி அடைந்தார். உடனே அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்துள்ளார். ஆனால் 3 பேரும் சேர்ந்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அவர்களிடமிருந்து ஒருவழியாக தப்பித்து அரை நிர்வாணமாக ஓடிய பெண் போலீஸ், அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சென்று தஞ்சமடைந்து ஆடை தருமாறு கேட்டுள்ளார். பின்னர் அவசர போலீஸ் 100க்கும் போன் செய்து தகவலை கூறியுள்ளார்.

போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து சிவகங்கை ரோந்து போலீசாருக்கு தகவல் அனுப்பப்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், பெண் போலீசை பத்திரமாக மீட்டனர். பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை எஸ்பி சிவபிரசாத் உத்தரவின்பேரில், டிஎஸ்பி அமல அட்வின், சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி ஆகியோர் விசாரணை நடத்தி ராபின், மகாராஜா, ஹரீஸ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

இச்சம்பவத்தில் மேலும் யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான 3 பேரில் ஹரீஸ் கல்லூரி மாணவன் ஆவார். மற்ற இருவரான ராபின், மகாராஜா மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஆயுதப்படையில் பெண் போலீஸ் பணியாற்றுவதால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தின் மீது வழக்குப்பதிவு செய்ய தாமதம் செய்யப்பட்டது. பாலியல் பலாத்கார விவகாரம் மூடி மறைப்பதற்கும் முயற்சிகள் நடந்தது.

ஆனால் அந்தப் பெண் போலீஸ் அவசர போலீசிற்கு போன் செய்ததாலும், சம்பவம் நடந்ததை அப்பகுதி மக்கள் வெளியில் சொன்னதாலும், மீடியாக்களுக்கு நேற்று பிற்பகல் தகவல் பரவியது. இதனால், பிரச்னையை மூடி மறைக்க முடியாமல் வேறு வழியில்லாமல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க, சிங்கப்பெண் சிறப்பு அதிரப்படை உருவாக்கிய நான்கே நாட்களில், பெண் போலீசே கூட்டு பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

* காலையில் விழிப்புணர்வு இரவில் கூட்டு பலாத்காரம்
சிவகங்கையில், பாலியல் சம்பவம் நடந்த இடம் அதிகமாக வீடுகள் இல்லாத பகுதியாகும். அதனால் அப்பகுதியை தேர்வு செய்து அங்கு பெண் போலீசை ராபின் வரவழைத்துள்ளார். கடந்த 7ம் தேதி சிவகங்கையில் டாஸ்மாக் பாரில் தவெக கிளை செயலாளர் நவீன் (25) வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 8ம் தேதி காரைக்குடியில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

இந்நிலையில் பெண் போலீஸ் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் இம்மாவட்ட மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. நேற்று முன்தினம் கலெக்டர் பொற்கொடி தலைமையில் சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் சிங்கப் பெண்கள் போலீஸ் பிரிவு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அன்று இரவே ஆயுதப்படை போலீஸ் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* கல்லூரி மாணவியை கத்தியால் வெட்டி பாலியல் வன்கொடுமை:9 பேர் கும்பல் மீது போலீசில் புகார்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த விவசாயி குடும்பத்தினருக்கும், அவர்களது பங்காளிகளுக்கும் இடையே, கடந்த 2024 முதல் நிலத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை நடத்துவதற்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தின் முதியவர் ஒருவர் உதவி செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இருதரப்புக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.

அப்போது, முதியவரிடம் எதிர்தரப்பை சேர்ந்த 9 பேர் கொண்ட கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அங்கிருந்த 18 வயது கல்லூரி மாணவி, தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், நீதிமன்றத்தில் உள்ள வழக்கை வாபஸ் பெறும்படி கூறி, அந்த மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், அந்த மாணவியை கத்தியால் வெட்டி, ஆடைகளை கிழித்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அதனை தங்களது செல்போனிலும் அந்த கும்பல் வீடியோ எடுத்துள்ளது.

தாக்குதலில் காயமடைந்த மாணவி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் வீடு திரும்பினார். இதுகுறித்து போச்சம்பள்ளி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், குற்றவாளிகளை கைது செய்வதற்கு பதிலாக, போலீசார் தங்களை மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட மாணவி குற்றம்சாட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய போலீசாரே, புகார்தாரரை மிரட்டுவதாக எழுந்துள்ள புகார் போச்சம்பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* தவெக அரசு பதவியேற்ற நாள் முதல் நாள்தோறும் கொலை, கொள்ளை, வன்முறைச் சம்பவங்கள் வரைமுறையின்றி அதிகரித்துள்ளன. சிறுமிகள், பெண்கள், மூதாட்டிகள் உள்பட பலரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர்.

* இதில், குறிப்பிடத்தக்க அம்சம், பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஆளும் தவெக கட்சியை சேர்ந்தவர்களே அதிகம் கைதாகி வருகின்றனர்.

Tags : Singappan Action Force for Women's Protection ,Taweka Pramughar ,Sivaganga ,Singappen Special Action Force ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாட்டில் பல்வேறு குற்ற...