×

ஆத்துப்பாளையத்தில் ஆக்கிரமிப்பு வீடுகளை பெயரளவிற்கு அப்புறப்படுத்திய நீர்வளத்துறை அதிகாரிகள்

திருப்பூர், ஜூன் 13: திருப்பூர் ஆத்துப்பாளையம் பகுதியில் நீர்நிலை புறம்போக்கில் ஆக்கிரமித்து கட்டியிருந்த வீடுகளை நீர்வளத்துறை அதிகாரிகள் நேற்று பெயரளவுக்கு அகற்றினர். திருப்பூர் ஆத்துப்பாளையம் வழியாக நல்லாறு செல்கிறது. இந்த நல்லாற்றின் இரு புறத்திலும் நீண்ட காலமாக ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர். நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டியுள்ள வீடுகள், நிறுவனங்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆத்துப்பாளையம் அம்பேத்கர் நகரில் மொத்தம் 114 வீடுகள் உள்ளன. அதில் 87 வீடுகள் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை காலி செய்யுமாறு நீர்வளத்துறை அதிகாரிகள் 3 முறை நோட்டீஸ் அளித்துள்னர்.

இதில் சில வீடுகளில் குடியிருந்தவர்கள் காலி செய்து வாடகை வீட்டில் குடியேறினர். அதில் தகுதியுடைய 38 பேருக்கு செட்டிபாளையம் அருகே கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்துள்ளனர். அதில் 12 பேர் வைப்புத்தொகையாக ரூ.1.95 லட்சத்தை செலுத்திய நிலையில் 2 பேர் மட்டுமே அடுக்குமாடி குடியிருப்புக்கு குடிபெயர்ந்துள்ளனர். மேலும், உள்ள பொதுமக்கள் அடிப்படை வசதி இல்லாததால் அடுக்குமாடி அல்லாமல் வேறு இடத்தில் வீடு வழங்குமாறு மனு கொடுத்துள்ளனர். கலெக்டரும் பரீசிலனை செய்வதாக கூறியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று நீர்வளத்துறை உதவி பொறியாளர் ராகுல் தலைமையில் கொங்கு நகர சரக போலீஸ் உதவி கமிஷனர் கணேசன், இன்ஸ்பெக்டர் சின்னதங்கம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட போலீசாருடன் அம்பேத்கர் நகருக்கு சென்றனர். அங்கிருந்து காலி செய்து அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்ற இருவரின் வீட்டை கடப்பாரை வைத்து பெயரளவிற்கு இடித்துவிட்டு சென்றனர். அதே போல முத்துநகர், அண்ணா நகர் ஆகிய பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு வீடுகளை பெயரளவுக்கு அகற்றினர்.

Tags : Water Resources Department ,Athupalayam ,Tiruppur ,Nallar River ,Athupalayam, Tiruppur ,
× RELATED கள் இறக்கி விற்ற விவசாயி மீது வழக்கு