×

கோலார் தங்கச் சுரங்கத்தில் இருந்து நேரடியாக குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக மோசடி: கேரளத்தில் கேஜிஎப் சாமி கைது

 

திருவனந்தபுரம்: கோலார் தங்கச் சுரங்கத்தில் இருந்து தங்கக்கட்டிகளை வாங்கி குறைந்த விலைக்கு தருவதாக கூறி நகைக்கடை அதிகாரிகள் உள்பட பலரை ஏமாற்றிய கேஜிஎப் சாமி என்று அழைக்கப்பட்டு வந்த ஆசாமியை கொடுங்கல்லூர் போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள மாதவமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜி (61). தன்னை சாமி என்று கூறிக்கொண்டு திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூரில் ஒரு ஆசிரமம் நடத்தி வந்தார். இவருக்கு கேஜிஎப் சாமி என்று வேறொரு பெயரும் உண்டு.

இவர் திருச்சூர், கொடுங்கல்லூர் பகுதிகளில் உள்ள நகைக்கடை அதிபர்களை தொடர்பு கொண்டு, கோலார் தங்க வயலில் மிகவும் நெருங்கிய நண்பர்கள் இருப்பதாகவும், அங்கிருந்து தங்கக் கட்டிகளை வாங்கி குறைந்த விலைக்கு தருவதாகவும் கூறியுள்ளார். அவர்களை நம்ப வைப்பதற்காக ஒரிஜினலை தோற்கடிக்கும் வகையில் செய்யப்பட்ட போலி தங்கக் கட்டிகளை காண்பித்துள்ளார். அதை நம்பி பல நகை வியாபாரிகள் ஷாஜியிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்துள்ளனர். ஆனால் அந்த தங்கக் கட்டிகள் அனைத்தும் போலி என்று பின்னர்தான் அவர்களுக்கு தெரியவந்தது. ஷாஜியிடம் ஏமாந்தவர்கள் இதுகுறித்து கொடுங்கல்லூர் போலீசில் புகார் செய்தனர்.

இது குறித்த அறிந்த அவர் தலைமறைவானார். போலீசார் வழக்கு பதிவு செய்து கேஜிஎப் சாமியை தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று இவர் கொடுங்கல்லூரில் உள்ள ஆசிரமத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர். ஆசிரமத்தில் நடத்திய சோதனையில் ஏராளமான போலி தங்கக் கட்டிகள், போலி நகைகளை போலீசார் கைப்பற்றினர். விசாரணைக்குப் பின் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : KGF Sami ,Kerala ,Kolar Gold Mine ,Thiruvananthapuram ,Asami ,Pathanamthita ,
× RELATED இலங்கையை சேர்ந்த ராப் பாடகர்...