- தவேகாவிஸ்
- ஸ்டாலின்
- கொளத்தூர்
- திமுக
- பெரம்பூர்
- மு.கே ஸ்டாலின்
- பதிவாளர் அலுவலகம்
- பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை
- சென்னை
பெரம்பூர்: சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பெரம்பூர் பேப்பர்மில்ஸ் சாலையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தின் வெளிப்பக்க சுவற்றில் நீண்ட காலமாக திமுக சார்பில் மு.க.ஸ்டாலினின் படத்தை வரைந்து வந்துள்ளனர். பின்னர், கடந்த சட்டமன்ற தேர்தல் விதிமுறைகளால், சுவரில் வரையப்பட்டிருந்த மு.க.ஸ்டாலினின் படங்கள் அகற்றப்பட்டன. இந்நிலையில் அதே இடத்தில் நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் படங்களை திமுக சார்பில் வரையும் பணி நடைபெற்றது.
அப்போது அங்கு வந்த 10க்கும் மேற்பட்ட தவெகவினர், மு.க.ஸ்டாலினின் படம் வரையக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து, திமுகவினருடன் வாய்த்தகராறில் ஈடுபட்டனர். அதற்கு திமுகவினர், நாங்கள் இங்கு நீண்ட காலமாக திமுக தலைவரின் படத்தை வரைந்து வருகிறோம். நீங்கள் வேறு பகுதியில் வரைந்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். எனினும் தவெகவினர் மறுப்பு தெரிவித்து ரகளையில் ஈடுபட்டனர். இதுகுறித்து செம்பியம் காவல்நிலையத்தில் சார்பதிவாளர் அலுவலக நுழைவுவாயில் சுவரில் கட்சியினர் படங்களை வரையக்கூடாது என்று சார்பதிவாளர் (பொறுப்பு) ஏழுமலை புகார் அளித்தார்.
இதுபற்றி தகவலறிந்ததும் திமுக பகுதி செயலாளர் ஐசிஎப் முரளி, தலைமை செயற்குழு உறுப்பினர் மகேஷ்குமார், மண்டல குழு தலைவர் சரிதா உள்பட 100க்கும் மேற்பட்ட திமுகவினர் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திமுகவினருக்கும் தவெகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுபற்றி தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த புளியந்தோப்பு துணை ஆணையர் முத்துக்குமார், உதவி ஆணையர் முரளி, இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி மற்றும் போலீசார் திமுக மற்றும் தவெகவினரிடையே போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும், பொது இடத்தில் சுவர் விளம்பரம் செய்வதற்கு சென்னை மாநகராட்சியிடம் அனுமதி வாங்க வேண்டும். இருதரப்பினரும் முறையாக அனுமதி வாங்கி சுவர் விளம்பரம் செய்து கொள்ளுங்கள். அதுவரை பிரச்னை வருவதை தவிர்க்க, இருதரப்பினரும் சுவர் விளம்பரம் செய்ய வேண்டாம் என்று துணை ஆணையர் முத்துக்குமார் அறிவுறுத்தி, இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். இப்பிரச்னை குறித்து திமுக சார்பில் செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அப்புகாரில், நாங்கள் சுவர் விளம்பரம் செய்யும்போது, எங்களின் பொருட்களை சேதப்படுத்தி தவெகவினர் தாக்க முயற்சித்தனர் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. அதேபோல் தவெக தரப்பில் சுரேஷ் என்பவர், திமுகவினர்மீது செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த 2 புகார்களின்பேரில் செம்பியம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
