×

“தனிமனித ஒழுக்கம்”- உங்க கட்சி நிர்வாகிகளுக்கு எப்போ சொல்லி குடுப்பீங்க..! மேடையில் மட்டும் தான் பாடமெடுப்பீங்களா?

சென்னை: சென்னை ஆலந்தூர் பகுதியில் கணவனை இழந்து தனியாக வசித்து வரும் பெண் ஒருவரின் வீட்டிற்குள் இரவு நேரத்தில் நுழைந்து பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாக தவெக நிர்வாகி வேம்புலி என்பவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது.

இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசிய கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படையைத் தொடங்கி வைத்து தனி மனித மற்றும் சமூக ஒழுக்கம் குறித்து மேடையில் பாடமெடுத்த முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களே, உங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு எப்போது தனிமனித ஒழுக்கத்தை சொல்லித் தருவீர்கள்? அவர்களிடம் இருந்து எப்படி பெண்களைப் பாதுகாக்க போகிறீர்கள்? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது என்று விமர்சித்து உள்ளார்.

வழக்குப்பதிவு செய்யவும், விசாரணை நடத்தவும் அதிகாரம் இல்லாத வகையில் அமைக்கப்பட்டிருக்கும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையால் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களில் விழிப்புணர்வு எனும் பெயரில் ரீல்ஸ் போட முடியுமே தவிர, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை அடியோடு தடுக்க முடியாது என்ற விமர்சனங்களும் எழத் தொடங்கியிருக்கிறது என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

ஆலந்தூர் பகுதியில் பெண்ணின் வீடு புகுந்து பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்த தவெக நிர்வாகி மீது எடுக்கப்படவுள்ள நடவடிக்கை அத்துமீறல்களில் ஈடுபடும் தவெகவினர் மட்டுமின்றி பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் அனைவருக்கும் பாடமாக அமையுமாறு இருக்க வேண்டும் என டிடிவி தினகரன் தமிழக அரசை வலியுறுத்தி உள்ளார்.

Tags : Chennai ,Alandoor, Chennai ,
× RELATED தவெகவில் இணைகிறார் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்?