×

பரங்கிப்பேட்டையில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க தமிழக அரசு அனுமதிக்க கூடாது – எம்.எச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

சென்னை: கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகிலுள்ள கடற்பகுதியில் புதிதாக மேலும் நான்கு ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஹிந்துஸ்தான் ஆயில் நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக வெளியாகும் தகவல்கள் மிகுந்த கவலை அளிப்பதாக, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

இது தொடர்பான அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது, “பரங்கிப்பேட்டை அருகிலுள்ள கடற்பகுதியில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) அனுமதி கோரி தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது.

ஏற்கனவே அந்த பகுதியில் செயல்பட்டு வரும் எண்ணெய் கிணறுகளில் உற்பத்தி குறைந்து வருவதால் புதிய கிணறுகள் அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் இத்தகைய திட்டங்கள் கடல்சார் சுற்றுச்சூழலுக்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை. குறிப்பாக மீன்வள வளங்கள் குறைவதன் மூலம் ஆயிரக்கணக்கான மீனவர் குடும்பங்களின் வாழ்வாதாரம் நேரடியாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

பரங்கிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார கடற்பகுதிகள் சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாகும். அங்கு மேற்கொள்ளப்படும் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் கடல் நீர் மாசுபாடு, உயிரியல் சமநிலை பாதிப்பு மற்றும் பாரம்பரிய மீன்பிடித் தொழிலுக்கு நீண்டகால ஆபத்தை உருவாக்கும். 2025ஆம் ஆண்டு இதே போன்ற முயற்சிகளுக்கு எதிராக திமுக அரசு எடுத்த நிலைப்பாடு மக்களால் வரவேற்கப்பட்டது. தற்போதைய அரசும் அதே உறுதியான நிலைப்பாட்டை தொடர வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பும், மீனவர்களின் வாழ்வாதார உரிமையும் எந்த நிறுவன நலனுக்கும் பலியாக்கப்படக் கூடாது. எனவே, பரங்கிப்பேட்டை கடற்பகுதியில் புதிய ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என வலியுறுத்துகிறோம்”, என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

Tags : TAMIL ,PARANGIPETA ,M.P. H. Jawahirulla ,Chennai ,Hindustan Oil Company ,Parangipete district ,Cuddalore district ,Member of the ,Assembly ,of the Humanist ,People's Party ,M. ,
× RELATED தவெகவில் இணைகிறார் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்?