×

அமெரிக்கா இரண்டாவது நாள் தாக்குதல் பக்ரைன், ஜோர்டான், குவைத் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் பதிலடி: ராணுவ தளங்கள் குறிவைத்து அழிப்பு

 

துபாய்: ஈரான் மீது அமெரிக்கா இரண்டாம் கட்டமாக நேற்று தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு முயற்சிகளை எதிர்த்து கடந்த பிப்ரவரியில் அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதலை தொடங்கின. இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தியது. மேலும் உலகின் எண்ணெய், எரிபொருள் ஏற்றுமதிக்கு முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால் வளைகுடா நாடுகளில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இந்த நிலையில் அமெரிக்காவின் அப்பாச்சி ரக நவீன ஹெலிகாப்டர், ஹார்மூஸ் நீரிணை அருகே சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த பதற்றமான சூழலில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் அத்துமீறிவிட்டதாக கூறி அமெரிக்கா ஈரானின் பல்வேறு நகரங்கள் மீது கடுமையான ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குல்களை நடத்தியுள்ளது. ஈரானின் தேவையற்ற மற்றும் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக்கு பதிலடியாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

அமெரிக்க விமான படை, கடற்படையினரால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஏற்பட்ட சேதங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. தாக்குதலின் போது ஏற்பட்ட வெடிச்சத்தங்கள், தெஹ்ரான் மற்றும் துறைமுக நகரான பண்டார் அப்பாஸ் ஆகிய பகுதிகளில் எதிரொலித்தன. அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பக்ரைன், குவைத் மற்றும் ஜோர்டான் ஆகிய வளைகுடா நாடுகளைக் குறிவைத்து ஈரான் தாக்குதல்களை நடத்தியது. பக்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல்களைத் தொடுத்தது. இதனை தடுக்கும் விதமாக அவ்விரு நாடுகளும் வான் பாதுகாப்பு அமைப்புகளையும் பயன்படுத்தின. அமெரிக்கப் படைகள் தங்கியிருந்த ஒரு விமானத் தளத்தை நோக்கி ஈரான் ஏவிய ஐந்து ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தியதாக ஜோர்டான் தெரிவித்துள்ளது. ஈரானிலிருந்து அஸ்ராக் நோக்கி ஏவப்பட்ட ஐந்து ஏவுகணைகளை நாங்கள் இடைமறித்து சுட்டு வீழ்த்தினோம். இதன் விளைவாக ஏவுகணைகளின் பாகங்கள் சிதறி விழுந்தன. ஆனால் இதனால் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று ஜோர்டான் ராணுவம் தெரிவித்தது.

 

Tags : United States ,Iran ,Bahrain ,Jordan ,Kuwait ,Dubai ,Gulf ,Israel ,
× RELATED தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!