×

திரிலோசன யோகம்

கிரகங்கள் இணைவுகள் யாவும் யோகம் என்ற பலன்தான். இவை ஒவ்வொன்றும் ஆச்சர்யம்தான். ஜோதிடம் என்பது புரியாமல் புரியச் செய்யும் ஒரு அற்புத சாஸ்திரம். பல குழப்பங்களும் பல மாற்றத்தையும் பல விஷயங்கள் மூலம் கண்டு தெளிவதாகும். அவ்வாறு ஜோதிடம் என்பதைப் பற்றி ஒரு முழு அனுபவம் உண்டு. ஒன்று முழுமையாக தெரிந்திருக்க வேண்டும் அல்லது எதுவும் தெரியாமல் கற்க வேண்டும். பாதி ஜோதிடராக இருப்பதால் குழப்பத்தின் உச்ச நிலை கண்களை சுற்ற வைக்கும் என்பது நிதர்சனம். குழப்பத்தைத் தவிர்க்க ஆழ்ந்து பொறுமையாக சிந்தித்தல் அவசியம். அந்தப் பொறுமை இந்தக் காலத்திற்கு பொருந்தி வருமா என்றால் சந்தேகமே. இவற்றில் யோகங்களால் ஏற்படும் பலன்களும் கிரகக் காரகங்களும் சிறப்பான அமைப்புகளைத் தரும்.
இந்த கிரகக் காரகங்களும் காலத்திற்கேற்றவாறு புதிய விஷயங்களை புதிய அனுபவங்களை புதிய பொருட்களைப் பற்றி அனுபவத்தைத் தரும். ஒவ்வொரு யோகம், ஒவ்வொரு காரகத்துவம் மற்றும் ஒரு ஜாதகம் மற்றும் ஜாதகர்களுக்கான சூழ்நிலை மற்றும் யோகம் மற்றும் அவயோகத்தை நமக்கு கற்றுத் தரும். வருங்கால சந்ததிகள் இந்த சாஸ்திரத்தை இன்னும் எப்படியெல்லாம் மாற்றப் போகிறார்கள் என்பதே நிச்சயமான ஆச்சர்யம்தான். அதில் இந்த யோகங்கள் ஒரு தொடக்கப் பாதையாக இருக்கும் என்பது நிச்சயம். அதில் திரிலோசன யோகம் என்ன சொல்கிறது.
திரிலோசன யோகம் என்றால் என்ன?
‘திரி’ என்பதற்கு ‘மூன்று’ என்று பொருள். ‘லோசன’ என்றால் ‘கண்கள்’ என்று பொருள். மூன்று கண்களைக் கொண்ட சிவ பெருமானை மையமாகக் கொண்ட பலன் ஆகும். அதாவது, ஒரு ஜாதகத்தில் சூரியன், சந்திரன் மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்கள் ஒன்றுக்கொன்று திரிகோணம் என்று சொல்லக்கூடிய 1,5,9 ஆகிய பாவகங்களில் அமரும் பொழுது உண்டாகும் அமைப்பிற்கு ‘திரிலோசன யோகம்’ என்று பொருள். இது மங்களகரமான சக்திவாய்ந்த யோகமாகும்.
திரிலோசன யோகத்தின் சூட்சுமங்கள் என்ன?
திரிலோசன யோகம் நன்றாக இருக்க வேண்டுமெனில், சூரியன், சந்திரன், செவ்வாய் போன்ற கிரகங்கள் நிச்சயமாக நீசம் பெறக்கூடாது. மேலும், சூரியன், சந்திரன் மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்கள் ராகு – கேது கிரகங்களின் தீட்சண்ய பார்வையிலோ அல்லது இவைகளின் சேர்க்கை அமையாமல் இருப்பது நிச்சயமாக நல்ல யோகப் பலன்களை ெபறும். சூரியனின் நிலை, சந்திரனின் நிலை மற்றும் செவ்வாயின் நிலை, வலிமைகளை பொறுத்தே நற்பலன்கள் உண்டாகும்.
திரிலோசன யோகத்தின் பலன்கள்
* எதிரிகளை வீழ்த்தும் திறன் படைத்தவர்களாகவும் ஆளுமைத் திறன்களாகவும் இந்த திரிலோசன யோகம் அமையும்.
* மிகச் சிறந்த அறிவு மற்றும் புத்திசாலித்தனம் உடையவராக இருப்பார். தன்னை சந்திக்க வருபவர்கள் இதற்காகத்தான் வந்திருக்கிறார் என முன்னமே அறிந்திருப்பார்.
* அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் தொடர்புகள் கொண்டிருப்பார்கள். ஆகவே, பெரிய வெற்றியும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
* இவர்கள் அதீத வசதி வாய்ப்புகள் மற்றும் செல்வ வளம் கொண்டவர்களாக இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
* எதற்கும், எப்பொழுதும், யாருக்கும் பயப்படாத எண்ணமும் சிந்தனையும் உடையவர்களாக இருப்பார்கள்.
* எந்தளவிற்கு வசதிகள் வாய்ப்புகள் இருந்தாலும் ஞானம், அறிவு இருந்தாலும் ஆன்மிக நம்பிக்கை இவர்களுக்கு அதிகம் உடையவர்களாக இருப்பார்கள்.
* இவர்கள் வீட்டில் சிலர் அமாவாசை தினங்களில் பிறந்தவர்களாக இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.
* இன்னும் சிலர் விளையாட்டுத் துறைகளில் மேம்பட்டவர்களாகவும் இருப்பது மட்டுமின்றி, விளையாட்டுத் துறையில் அரிய சாதனைகள் செய்து அரசின் உயரிய விருதுகளை பெறுவதற்கான தகுதி உடையவர்களாக இருப்பார்கள்.
* வேகமான முடிவுகள் எடுப்பது மற்றும் சகோதரர்களுடன் நன்றாக சுமுகமாக பழகுவது நல்ல விஷயங்களை உண்டாக்கும்.
* இவர்களின் அதிகாரமும் நிர்வாகமும் இவர்களை மேன்மை நிலைக்கு உயர்த்தும் என்பது நிச்சயம்.
* இந்த யோகம் உள்ளவர்கள் டெக்னிக்கல் தொடர்பான படிப்புகளை படிப்பதற்கும், டெக்னிக்கல் துறையில் பணியாற்றுவதற்குமான வாய்ப்புகள் உண்டு.
திரிலோசன யோகம் சிறப்படைய என்ன செய்யலாம்
* தினமும் காலையில் சூரிய உதய நேரத்தில் சூரிய நமஸ்காரம் செய்து, ஆதித்யஹிருதயம் பாராயணம் செய்வது நற்பலன்களை உண்டாக்கும். தேகத்தில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் யாவும் வெளிப்பட்டு உடலை லேசாக உணர்வீர்கள். முக்கண்ணன் என்பவர் சிவபெருமானே. ஞாயிற்றுக்கிழமை கோதுமை அல்லது வெல்லம் கலந்த உணவை ஏழைகளுக்கு தானம் செய்யலாம்.
* செவ்வாய்க் கிழமைதோறும் சிவசுப்ரமணியர் வழிபாடு செய்வது சிறப்பான நற்பலன்களை அளிக்கும். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வது சிறப்பான நற்பலன்களை அளிக்கும். செவ்வாய்க்கிழமை துவரம் பருப்பு அல்லது சிவப்பு நிற ஆடைகளை தானமாக வழங்கலாம்.
* திங்கள்தோறும் சந்திர வழிபாடு செய்வதும் நல்லது. அம்பாளுக்குத் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது, மலர் கொடுத்து வழிபாடு செய்வது நன்மை செய்யும். திங்கட்கிழமை பச்சரிசி அல்லது பால் தானம் செய்வது
மன அமைதிக்கு வழிவகுக்கும்.

Tags :
× RELATED மனதில் இனிமையை அருளும் இனிய நாமங்கள்