×

கண் திருஷ்டியும் பரிகாரங்களும்

கண் திருஷ்டி என்றால் என்ன?
எல்லோருடைய பார்வையும் நல்லவையாக இருக்கும் என்று சொல்ல முடியாது. அவர்கள் எண்ணம் தீயதாககூட இருக்கலாம் அல்லவா? தீய எண்ணங்களின் தொடர்ச்சியான தாக்குதலே கண் திருஷ்டி. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அதுபோல, மனதில் எழும் தீய குணங்களை முகம் காட்டி கொடுத்துவிடும். இந்த தீய எண்ணங்களின் ஜுவாலை நம் கண்கள் மூலம் வெளிப்படும். ஒரு பெண்மணி, விலை உயர்ந்த புடவை உடுத்திக்கொண்டு கோயிலுக்கு சென்றார். அங்கு அவர் தோழியும் வந்திருந்தார். அவர் வந்ததிலிருந்தே புடவையைப் பற்றி புகழ்ந்து பேசி, என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கிறது என்று சொன்னார். பெண்மணிக்கோ.. மகிழ்ச்சி தாங்கவில்லை. ஆனால், மறுநாள் அந்த புடவை ஆணியில் மாட்டி பெரிய கிழிசல் ஏற்பட்டுவிட்டது. இதைத்தான் கண் திருஷ்டி என்கிறோம்.
ஒரு மாந்தோப்பில் ஒரு மரத்தில் மாங்காய் கொத்துக் கொத்தாக காய்த்து தொங்கியது. அந்த வழியாக சென்ற ஒருவனின் பொறாமை பார்வை, அதன் மீது பட்டது. ஒரு சில தினங்களிலே நன்றாக இருந்த மரம், அதன் செழிப்பை இழந்தது. காய்களில் ஒருவித நோய் தாக்கி கீழே உதிர்ந்து விழுந்தன. அதே நேரத்தில், தோப்பில் இருந்த மற்ற மரங்கள் நன்றாக இருந்தன. இதைத்தான் கண் பார்வை தோஷம் என்பார்கள். கல்லால் அடித்து இருந்தால் இரண்டு மூன்று மாங்காய்கள்தான் சேதம் அடைந்து இருக்கும். ஆனால், கண்ணடிப்பட்டதால் முழு மரத்துக்கும் சேதாரமாகிவிட்டது. இதைதான் நமது முன்னோர்கள் கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பார்கள்.
கண் திருஷ்டி பரிகாரங்கள்
* நல்ல ஆரோக்கியமாக இருந்த ஒருவர் கண்திருஷ்டியினால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, இளைத்தும் போகலாம். எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரே என்று பேசிக்கொள்வார்கள் உடல் நலம் குன்றிய அவருக்கு எப்படி திருஷ்டி சுற்றுவது?
மூன்று தெருக்கள் கூடும் இடத்தில் இருந்து மண் எடுத்துக் கொள்ளுங்கள். 9 காய்ந்த மிளகாய் ஒரு பிடி உப்பு கொஞ்சம் கடுகு ஆகியவற்றையும் எடுத்துக்கொண்டு, ஒரு கொட்டாங்குச்சி அல்லது இரும்பு பாத்திரத்தில் போட்டுக்கொண்டு முச்சந்தி மண்ணையும் அதனோடு போட்டு உடல்நலம் குன்றியவரை கிழக்கு பார்த்து அமரச் செய்து இடமிருந்து வலமாக மூன்று முறையும் வலமிருந்து இடமாக மூன்று முறையும் சுற்றி கண் பட்ட திருஷ்டிகள் கடுகு போல வெடிக்கட்டும் என்று சொல்லியவாறு கடவுளை வேண்டி கரி அடுப்பு பற்ற வைத்து அந்த தணலில் போடுங்கள். பிறகு கால்களை கழுவிக்கொண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டவருக்கும் பூசி விடுங்கள், விரைவில் குணமடைவார்.
* வியாபாரத்தலம் அல்லது அலுவலகத்தில் கண் திருஷ்டி இருந்தால், அந்த திருஷ்டிக்கு பரிகாரம் இதுதான்.
வளர்பிறை சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமையில் கடற்கரைக்கு சென்று பெரிய கேன் அல்லது பாட்டிலில் கடல் நீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதை துணியில் வடிகட்டி, அந்த நீரை எடுத்துச் சென்று உங்கள் அலுவலகம் தொழில் இடத்தில் குறிப்பாக உங்கள் அறையில் தெளியுங்கள் முடிந்தால் கழுவியும் விடலாம் இதில் முக்கியமான விஷயம் இதை பிறரைக் கொண்டு செய்யக்கூடாது. பாதிக்கப்பட்டவரே செய்ய வேண்டும். இவ்வாறு மாதம் ஒருமுறை செய்து வாருங்கள். திருஷ்டி விலகி தொழில் சிறப்பாக வளரும்.
* குழந்தைக்கு திருஷ்டி கழிக்க, குழந்தை பிறந்த பிறகு தலைக்கு ஊற்றும் நாட்களில் அல்லது மாலை வேலைகளில் சிறிதளவு ஆரத்தி கரைத்து அதில் குழந்தை கையில் உள்ள கருப்பு வளையலை கழற்றி போட்டு சுற்றி போட வேண்டும். இப்படி சுற்றிப் போடுவதால் வளைய வரும் திருஷ்டிகள் வளையலோடு போய்விடும்.
* சரியாக சாப்பிடாமல் அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு கண் திருஷ்டிகூட ஒரு காரணமா இருக்கலாம் அதற்கு பரிகாரமாக;
ஒரு கைப்பிடி உப்பை எடுத்து கையை நல்லா மூடி, தாய் மடியில் குழந்தையை இருத்தி இடமிருந்து வலமா மூணு தடவையும், வலமிருந்து இடமாக மூணு தடவையும் சுத்தி அப்படியே குழந்தையின் அம்மாவுக்கும் சுத்தி அந்த உப்பை தண்ணீரில் கரைத்துவிடவும். தண்ணீரில் உப்பு கரைவதை போல், திருஷ்டியிம் கரைந்து, குழந்தை சாப்பிட ஆரம்பிக்கும்.
கொஞ்சம் பெரிய குழந்தைகளாக இருந்தால், சிறிதளவு சாதம் வடித்து, சிவப்பு, மஞ்சள், வெள்ளை என கலர்களாக ஐந்து உருண்டைகள் செய்து ஞாயிற்றுக் கிழமைகளில் மதியம் 12 மணிக்கு இதே மாதிரி சுத்தி, வெவ்வேறு திசைகளில் எறிந்துவிடுங்கள். அதன் பின்னர், குழந்தையின் கை கால்களை கழுவிட்டு, நாமும் கழுவிக் கொண்டு வீட்டின் உள்ளே வரலாம். இந்த பரிகாரம் எந்த திசையில் இருந்தாலும் திருஷ்டியை போக்கச் செய்யும்.
* வாரம் ஒரு முறை கல் உப்பை தண்ணீரில் கலந்து குளித்து வர, திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் ஆகியவை நீங்கும். குறிப்பாக, அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்க் கிழமையில் இவ்வாறு குளிக்கலாம்.
* யாராவது உங்கள் இல்லத்திற்கு வந்தால், காபி கொடுக்கும் முன் தண்ணீரை குடிக்க கொடுக்க வேண்டும். அவர்கள் காப்பி அருந்தவில்லை என்றாலும், தண்ணீராவது குடிக்க கொடுத்த பிறகே, அவர்களை வழியனுப்ப வேண்டும். இப்படி செய்வதால், அவர்களின் மனநிலை எதுவாக இருந்தாலும் சரி, அவர்களின் எண்ணங்கள் எதுவாக இருந்தாலும் சரி, அதன் தாக்கம் அந்த இல்லத்தை பாதிக்காது. பன்னீருக்கு இருக்கும் சக்தி வெறும் தண்ணீருக்கும் இருக்கிறது.
* சிவப்பி கண், ஆந்தைக்கண், பச்சி கண், பாம்பு கண், சுடு…சுடு…சுடு என இவ்வாறு 11 தடவை கூறினால், கண் பட்ட தோஷம் விலகிப் போகும். இது நம் முன்னோர்கள் கையாண்டு வந்த முறையாகும். அதாவது, கண் திருஷ்டி பாட்டி கழிக்கும் முறையாகும்.

Tags :
× RELATED மனதில் இனிமையை அருளும் இனிய நாமங்கள்