238. மநுவித்யா
239. சந்த்ர வித்யா
240. சந்த்ர மண்டல மத்யகா
241. சாருரூபா
242. சாருஹாஸா
243. சாரு சந்த்ர கலாதரா
ஸ்ரீவித்யா சம்பிரதாயத்தின் அடிநாதமே அதனுடைய மந்திரம்தான். அந்த மந்திரத்தை வைத்துக் கொண்டுதான், ஸ்ரீவித்யா என்று பெயர் வைத்திருக்கிறோம். மேலும், இந்த மந்திரங்களெல்லாம் பீஜாட்சரங்களாக இருப்பதால், வெளிப்படையாக சொல்லவோ எழுதவோ முடியாது. அதே நேரத்தில் அதை காண்பிக்காமலும் இருக்க முடியாது. இந்த மந்திரங்கள் ஒரு எழுத்தில் தொடங்கி, அதாவது ஏக அட்சரத்தில் தொடங்கி இரண்டெழுத்து, மூன்றெழுத்து, நான்கெழுத்து என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஆனாலும், அம்பாளின் பதினைந்து எழுத்து மந்திரம்… பதினாறு எழுத்து மந்திரம் அதாவது பஞ்சதசாக்ஷரி – ஷோடசாக்ஷரி இந்த இரண்டு மந்திரங்களை விசேஷமாக ஸ்ரீவித்யா என்று சொல்கிறோம். பஞ்சதசி, ஷோடஸி என்று சொல்கிறோம்.
ஆனாலும், இந்த மந்திரங்களுக்குள் வேறுபாடு உண்டு. மந்திரங்களினுள் இருக்கும் பீஜாட்சரங்களை வைத்து வேறுபாடு உண்டு. ஒருவிதமான அமைப்பில் ஒரு மந்திரம் அமைந்திருந்தால், அதுவொரு தனி பிரிவு. இப்படி எழுத்துக்களுடைய அமைப்பை வைத்து பிரிவுகள், பேதங்கள் உள்ளன.
இது எப்படி இந்த பிரிவுகள் உண்டாயிற்று என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆதியில் யார் யாரெல்லாம் அம்பாளை வைத்து உபாசனை செய்தார்களோ, அவரவர்களுக்கு அம்பாள் எப்படியெல்லாம் மந்திரத்தை வெளிப்படுத்திக் காண்பித்தாளோ, அதை வைத்து இந்தப் பிரிவுகள் உண்டாயிற்று.
இந்த ஸ்ரீவித்யா சம்பிரதாயத்தில் ஆதியில் 12 பேர்களை குருமார்களாக சொல்வது வழக்கம்.
மகேச, மாதவ, விதாத்ரு, மன்மத, ஸ்கந்த, நந்தி, இந்த்ர, மனு, சந்த்ர, குபேர, அகஸ்த்ய, குரோத பட்டாரக … போன்றோர் ஆவார்.
மகேச – சிவன், மாதவ – விஷ்ணு, விதாத்ரு – பிரம்மா, மன்மத – மன்மதன், ஸ்கந்த – முருகன், நந்தி, இந்திரன், மனு, சந்திரன், குபேரன், அகஸ்தியர் லோபா முத்ரா சேர்த்துதான் சொல்ல வேண்டும். குரோத பட்டார – துர்வாஸர்.
இந்த பன்னிரண்டு பேர்கள்தான் ஆதி ஆச்சார்யார்கள்.
மேலே சொன்ன ஸ்ரீவித்யா மந்திரங்கள் அனைத்தும் ஒன்றுதான். ஆனால், மேலே சொன்ன பன்னிரண்டு குருமார்களுக்கும் பன்னிரண்டு விதமாக வெளிப்படுகின்றன. இதைப் புரிந்து கொள்வோம். இப்போது நாமத்திற்கு வருவோம். இப்படி மனுவுக்கு வெளிப்பட்ட மந்திரத்திற்கு மனு வித்யா என்று பெயர். எனவே, மனு வித்யா என்று சொல்லக் கூடிய ஸ்ரீவித்யா சொரூபிணீயாக இருக்கக் கூடியவள்.
சந்திரனுக்கு வெளிப்பட்ட மந்திரத்திற்கு சந்திர வித்யா என்று பெயர். சந்திர வித்யா என்கிற ஸ்ரீவித்யா சொரூபிணீயாக இருக்கக் கூடியவள்.
இதில் பிரசித்தமாக இருப்பது மன்மதனுக்கு வெளிப்பட்ட மந்திரமான பஞ்சதசாக்ஷரியாகும்.
இந்த நாமங்களில்தான் வசின்யாதி வாக் தேவதைகள் மந்திர சாஸ்திரத்தை காட்டிக் கொடுக்கிறார்கள். எல்லோரும் லலிதா உபாசனையைப்பற்றி பேசுகிறீர்களே… இவளை யார்யாரெல்லாம் உபாசனை செய்திருக்கிறார்கள் எனில், ஆதியில் மேலே சொன்ன அனைத்து குருமார்களும் செய்திருக்கிறார்கள். மனு மூலம் மனுவித்யா, சந்திரன் மூலம் சந்திர வித்யா.
அப்போது மனு என்பவர் யார். ஒவ்வொரு மன்வந்தர காலகட்டத்திலும் ஒவ்வொரு தலைவர் இருப்பார்கள். இப்போது இருக்கின்ற மன்வந்தரத்திற்கு வைவஸ்வத மன்வந்தரம் என்று பெயர். சதுர்யுகம், கல்ப காலம் என்று சொல்கிறோம். அதுபோல இந்த சதுர்யுகங்களில் பதினாலு மனுக்கள் இருப்பார்கள். இந்த பதினாலு மனுக்களும் அம்பிகையின் ஆக்ஞையின்படி ஒவ்வொரு காலகட்டத்தில் மாறிமாறி ஆட்சி செய்து கொண்டிருப்பார்கள். இப்போது ஆட்சி பண்ணுபவருக்குப் பெயர் வைவஸ்வத மனு என்று பெயர். அவர் பெயரைத்தான் சங்கல்பத்தில் வைவஸ்வத மன்வந்தரே என்று சொல்கிறோம். அப்படி மனுவால் உபாசிக்கப்பட்டதால் அவளுக்கு மனு வித்யா என்று பெயர்.
சந்திரனால், சந்திர பகவானால் உபாசிக்கப்பட்டதால் அம்பிகைக்கு சந்திர வித்யா என்று பெயர்.
இதற்கு அடுத்து, சந்திர மண்டல மத்யகா… இப்படி மனுவால் உபாசிக்கப்பட்டவள், சந்திரனால் உபாசிக்கப்பட்டவள் எப்படி இருக்கிறாள்? என்று இந்த நாமம் சொல்கிறது.
அம்பிகைக்கு என்று விசேஷமான சில ஸ்தானங்கள் உண்டு. கோயிலின் கர்ப்பக் கிரஹம், ஸ்ரீசக்ரம், மகா மேருவிற்கு மேல் அம்பிகை இருக்கிறாள். பூஜை செய்கிற விக்கிரகத்தில், குருநாதரிடம், அம்பிகை இருக்கிறாள். நம்முடைய இருதயத்தில் அந்தர்யாமியாக இருக்கிறாள். இதெல்லாம் அம்பாளுடைய விசேஷமான ஸ்தானங்கள். அதேபோல், சந்திரனை பார்க்கிறோம் அல்லவா? அந்த சந்திரனுக்கு சந்திர மண்டலம் என்று பெயர். அந்த சந்திர மண்டலத்தினுடைய மத்தியில் இருந்து கொண்டு, இரவு நேரத்தில் இந்த உலகத்திற்கு ஒளி தருவதற்காகவும், குளிர்ச்சி தருவதற்காகவும் அந்த சந்திரனை உண்டாக்கி அதன் மத்தியில் இருப்பதால் சந்திர மண்டல மத்யகா என்று பெயர்.
அடுத்த நாமம், சாரு ரூபா இப்படி சந்திர மண்டலத்தின் மத்தியில் இருப்பவள் எப்படி இருக்கிறாள் எனில், சாரு ரூபா… சாரு என்றால் மிகமிக இனிமை என்று அர்த்தம். அப்படியொரு இனிமை பொருந்தியவளாக இருக்கிறாள் என்று பொருள்.
அடுத்து சாரு ஹாஸா நம்மைப் பார்த்து அவள் ஒரு புன்னகை புரிகிறாள். அந்தப் புன்னகை அவ்வளவு இனிமையாக இருக்கிறது.
அடுத்து சாரு சந்த்ர கலாதரா – இப்படிப்பட்ட அம்பிகையானவள் சந்திரனை தன்னுடைய தலையில் அணிந்து கொண்டிருக்கிறாள். இதை நாம் லலிதா சஹஸ்ர நாமத்தினுடைய தியான ஸ்லோகத்திலேயே பார்க்கலாம். ‘‘தாரா நாயக சேகராம்’’ என்று வரி வருகிறதல்லவா. தாரா நாயகன் என்று சொல்லக் கூடிய சந்திரனை தன்னுடைய கிரீடத்தில் அணிந்து கொண்டிருக்கக் கூடியவள்.
சாரு சந்திர கலா தரா என்றால் இனிமையாக இருக்கக் கூடிய சந்திர கலையை, தரித்துக் கொண்டிருக்கக் கூடியவள்.
இங்கு கவிதை போன்ற வரி ஒன்று வருகிறது. அவள் சந்திர மண்டல மத்தியில்தான் இருக்கிறாள். ஆனால், அவளின் தலையில் சந்திரனை தாங்கிக் கொண்டிருக்கிறாள். ஏனெனில், சந்திரன்தான் அம்பாளை தாங்குகிறதுபோல் இருப்பதாக நினைத்துக் கொள்வோம். ஆனால், எல்லாவற்றிலும் நான் இருக்கிறேன். அதேபோல், அம்பிகை சந்திரனில் இருந்தாலுமே சந்திரனையும் நான் தான் தாங்குகிறேன் என்று இந்த நாமம் சொல்கிறது.
மேலே சொன்ன விளக்கத்தையும் தாண்டி இன்னும் சூட்சுமமான விளக்கத்தையும் பார்ப்போமா!
மனு வித்யா, சந்திர வித்யா… போன்ற இந்த நாமங்களின் அமைப்பை பார்த்தால் நமக்கொரு விஷயம் புரிய வரும்.
ஒரு சாதகனுடைய உபாசனையில் என்ன காண்பித்துக் கொடுக்கிறது என்பதை பார்க்க வேண்டும்.
மனு வித்யாவில் மனு என்றால் காலத்தினுடைய அதிபதி என்று பார்த்தோம். அந்த மனுவிலிருந்துதான் நாமெல்லாம் வந்திருக்கிறோம். அதனால்தான் நமக்கு மனுஜன், மனுஷன், மனிதன் என்று பெயர். அப்படிபட்ட மனுஷன் அம்பிகை உபாசிப்பதால் இந்தப் பிறவியினுடைய முக்கியத்துவம் தெரிய வருகின்றது.
அந்த மனு வித்யா என்கிற மந்திரமானது அப்படியே இவனுடைய சரீரத்தில் பிரவேசிக்கிறது.
அதற்கடுத்து சந்திர வித்யா – அம்பாளை கொஞ்சம் கொஞ்சம் சந்திர வித்யாவாக பார்க்க ஆரம்பிக்கிறான். பிறகு இந்த மந்திரமானது மனசுக்குள் பிரவேசிக்கின்றது. அதனால்தான் சந்திரனை நாம் மனோகாரகன் என்று சொல்லுவோம்.
முதல் நாமத்தில் உடம்பு என்கிற body consciousness ல் இருந்தான். அடுத்து மனதிற்குள் நின்றான்.
இதற்குப் பிறகு சந்திர மண்டல மத்யகா இப்போது அந்த மனசுக்கு மத்தியில் பிரகாசமான ஒரு பொருள் இருக்கிறது. அவனுக்குள் வெளிப்படுகின்றது. அந்த ஆத்மாவில் இருக்கக் கூடியவள்தான் சந்திர மண்டல மத்யகா ஆவாள். இதேபோல்தான் நம்முடைய மனசுக்கு மத்தியில், ஹ்ருதய ஸ்தானத்தில் ஜோதி மயமாக ஒளிர்ந்து கொண்டிருக்கிறாள். அவள்தான் சந்திர மண்டல மத்யகா. இப்படி தரிசனம் செய்யச் செய்ய அவனுக்குள் சாரு ரூபா, சாரு ஹாஸா, சாரு சந்த்ர கலாதரா என்று மாறுகின்றான்.
இந்த உபாசகனுடைய இருப்பே இனிமையாகி விடுகின்றது. சாரு ஹாஸா – இந்த உபாசகனுடைய சொல்லும் செயலும் இனிமையாகவே இருக்கின்றது. சாரு சந்த்ர கலாதரா இவனோடு சம்பந்தப்பட்ட பொருட்கள் ஆகட்டும், நபர்கள் ஆகட்டும் அது எல்லாமுமே இனிமையாகின்றது.
இந்த சாரு என்று சொல்லக் கூடிய இனிமையான நிலைக்கு கொண்டு செல்கிறாள்.
இந்த நாமத்திற்கான கோயிலாக கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதரைச் சொல்லலாம். ஏனெனில், இந்த ஆலயத்திலுள்ள அம்பாளின் திருநாமம் பிறையணி நுதலாள் ஆகும். இங்கு நாம் பார்க்கின்ற அம்பாள் சந்திர வித்யா என்று தொடங்கி சாரு சந்த்ர கலாதரா என்று வருகின்றது. எனவே இந்த ஆலயத்தைச் சொல்லலாம்.
(சக்தி சுழலும்…)
