×

விஷம் குடித்து தற்கொலை செய்தால்தான் தருவார்களா? நெல் கொள்முதல் ரூ.100 கோடி வரை பாக்கி 2 மாதங்களாக இழுத்தடிக்கும் அதிகாரிகள்: விழுப்புரத்தில் காதில் பூ சுற்றி விவசாயிகள் நூதன போராட்டம்

 

விழுப்புரம்: தமிழகத்தில் நெல் உற்பத்தியில் டெல்டா மாவட்டங்களுக்கு அடுத்ததாக விழுப்புரம் மாவட்டம் சிறந்து விளங்குகிறது. இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 50க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டன. விவசாயிகளிடம் நேரடியாக எடைபோட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஒழுங்குமுறை விற்பனை கூடங்களைவிட, இங்கு கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் ஆர்வமுடன் நெல் மூட்டைகளை கொண்டு வந்தனர்.

இவ்வாறாக நெல்கொள்முதலுக்கான பணம் ஒரு வாரத்திற்குள் வழங்கப்பட வேண்டும். ஆனால் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாகியும் கொள்முதல் நெல்லுக்குண்டான விலை கொடுக்கப்படாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தவெக ஆட்சி அமைந்து ஒரு மாதமாகியும், விவசாயிகளுக்கு கோடிக்கணக்கில் பணம் பாக்கி வைக்கப்பட்டுள்ளதால் வேதனையில் உள்ளனர். இதுபற்றி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் மற்றும் கலெக்டர், வேளாண் துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் சில நாட்களுக்கு முன் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

அப்போது, ஓரிருநாட்களில் பணத்தை பட்டுவாடா செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனிடையே நேற்று திருப்பச்சாவடிமேடு, கோவிந்தாபுரம், வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்த விவசாயிகள், விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வந்தனர். ஆனால் நிர்வாக காரணங்களால் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக திடீரென அறிவிக்கப்பட, ஏமாற்றமடைந்த விவசாயிகள் காதில் மல்லிகைபூ சுற்றி கொண்டு கலெக்டர் அலுவலகத்தில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்த மனு அளித்தனர்.

பின்னர் விவசாயிகள் கூறுகையில், ‘விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் நெல்கொள்முதல் செய்யப்பட்டு ரூ.100 கோடி வரை பாக்கி வைத்துள்ளனர். அதிகாரிகளிடம் கேட்க சென்றால் தலைமறைவாகி விடுகின்றனர். நாங்கள் விஷம் குடித்து தற்கொலை செய்தால்தான், எங்களுக்கான பணத்தை கொடுப்பார்களா? என மனம் குமுறினர்.

Tags : Villupuram ,Villupuram district ,Tamil Nadu ,Delta districts ,Tamil Nadu Government Consumer Goods Trading Corporation.… ,
× RELATED ‘முல்லைப்பெரியாறு அணை பிரச்னைக்கு...