- மீனாட்சி நடராஜன்
- தேர்தல் ஆணைக்குழு
- போபால், தில்லி
- காங்கிரஸ்
- பாஜக
- போபால்
- மத்தியப் பிரதேசம்
- காங்கிரஸ் கட்சி
- 18 வது மாநில தேர்தல்கள்
போபால்: மத்திய பிரதேச மாநிலங்களவை தேர்தல் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய பிரதேச மாநிலத்தில் வரும் 18ம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலுக்காக, காங்கிரஸ் கட்சி சார்பில் மீனாட்சி நடராஜன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். நேற்று வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்ட போது, மீனாட்சி நடராஜன் தனது வேட்புமனுவில் குற்றப் பின்னணி தொடர்பான தகவல்களை முறையாக தெரிவிக்காமல் மறைத்துள்ளதாக கூறி, அவரது மனுவை தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்தனர்.
இந்த நடவடிக்கையை கண்டித்து அதிருப்தி அடைந்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஹரிஷ் சவுத்ரி, ஜிட்டு பட்வாரி மற்றும் மாநில எதிர்க்கட்சி தலைவர் உமங் சிங்கார் உள்ளிட்டோர் போபாலில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு வரை நீடித்த தொடர் போராட்டத்தை அடுத்து, துணை தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சய் குமார் வஸ்தவா காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது தலைமை தேர்தல் அதிகாரி உடல்நலக்குறைவால் அலுவலகம் வரவில்லை என்பதால், இன்று காலை 11 மணிக்கு அவரை சந்தித்து முறையிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் உமங் சிங்கார் கூறுகையில், ‘நாளை காலை (இன்று) காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தலைமை தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து, தள்ளுபடி செய்யப்பட்ட மனுவை மீண்டும் ஏற்றுக் கொள்ள வலியுறுத்துவோம்’ என்று தெரிவித்தார். இதற்கிடையே, வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதை வரவேற்ற மாநில முதல்வர் மோகன் யாதவ், குற்றப் பின்னணியை மறைப்பது ஒரு குற்றம் என்றும்,
இதுபோன்ற வேட்பாளர்களை நிறுத்துவது குறித்து காங்கிரஸ் சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கூறினார். ஆனால் பாஜக ஜனநாயகத்தை குழிதோண்டி புதைப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் டெல்லி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகம் முன் காங்கிரஸ் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
