×

அடுத்ததாக யூசுப் பதானும் அவுட்? திரிணாமுல் காங்கிரசை உடைக்கிறார் அமித்ஷா: மம்தா ஆதரவு மூத்த தலைவர்கள் புகார்

புதுடெல்லி: திரிணாமுல் காங்கிரசை உடைப்பது அமித்ஷா தான் என பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ள அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கல்யாண் பானர்ஜி, கீர்த்தி ஆசாத், அடுத்ததாக யூசுப் பதானும் பாஜவில் சேரப் போவதாக தெரிவித்துள்ளனர். மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் கடும் பிளவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் மாநிலங்களவை எம்பி சுகேந்து சேகர் ராய் நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்து கட்சியிலிருந்தும் விலகினார்.

மக்களவை எம்பி ககோலி கோஷ் தஸ்திதார் தலைமையில் 20 அதிருப்தி எம்பிக்கள், கட்சியின் மக்களவை உறுப்பினர்களில் பெரும்பான்மையினரின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக கூறி தனி அணியாக அங்கீகாரம் கேட்டு சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் எழுத முடிவு செய்துள்ளதாக நேற்று முன்தினம் தெரிவித்தனர். இந்நிலையில், திரிணாமுல் காங்கிரசின் மூத்த தலைவர்களான கல்யாண் பானர்ஜி, கீர்த்தி ஆசாத் ஆகியோர் டெல்லியில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

நான் நேற்று பஹராம்பூர் தொகுதி எம்பி யூசுப் பதானிடம் பேசினேன். அவர் பரோடாவில் இருந்தார். அமித் ஷா தன்னை அழைத்ததாகவும், அவரைச் சந்திக்க டெல்லி வருவதாகவும் கூறினார். எங்கள் கட்சியை உடைக்க அமித் ஷா செயல்பட்டு வருகிறார். அவர்தான் எல்லாவற்றிக்கும் காரணமான நபர். அதிருப்தி எம்பிக்கள் நேர்மையானவர்கள் என்றால், பதவியை விட்டு விலகி தாராளமாக பாஜவில் சேரலாமே? அவர்கள் வார்த்தை ஜாலங்களை செய்யலாம்.

ஆனால் மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. அவர்கள் தங்கள் தலைவரை மம்தா பானர்ஜியிலிருந்து நரேந்திர மோடிக்கு மாற்றிக் கொண்டு விட்டார்கள். இதுபோன்ற இரட்டை வேடம் கொண்ட நபர்கள் கட்சியிலிருந்து வெளியேறுவது எங்களுக்கு மகிழ்ச்சியே. இந்த துரோகிகள் கட்சிக்கு துரோகம் செய்த பாஜவுடன் இணைய முடிவெடுத்து விட்டார்கள்.
இவ்வாறு கூறினர்.

இதற்கிடையே, அதிருப்தி எம்பிக்களான ஜூன் மாலியா, தீபக் அதிகாரி ஆகியோர் நேற்று கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் நடைபெற்ற முதல்வர் சுகந்து அதிகாரியின் நிர்வாக கூட்டத்தில் பங்கேற்றனர். அவர்களுடன் கேஷ்பூர் எம்எல்ஏ சியுலி சாஹாவும் பங்கேற்றார். 28 எம்பிக்களில் 20 பேரும், 80 எம்எல்ஏக்களில் 58 பேரும் மம்தாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் சோனியாவை சந்தித்தார் மம்தா பானர்ஜி: இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பங்கேற்ற திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

* டிஎம்சி முக்கிய தலைவர் கைது
மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் மிரட்டிப் பணம் பறித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சப்யசாச்சி தத்தா நேற்று அதிகாலை போலீசாரால் கைது செய்யப்பட்டார். தொழிலதிபரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டியதாக வந்த புகாரில் தத்தா கைதாகி உள்ளார்.

* மம்தா வீட்டில் சிஐடி சோதனை
மாநில எதிர்க்கட்சி தலைவர் குறித்த கட்சியின் கடிதத்தில் தங்களின் கையெழுத்துகள் போலியாக போடப்பட்டதாக அதிருப்தி எம்எல்ஏக்கள் சபாநாயகரிடம் புகாரளித்ததன் பேரில் சிஐடி போலீசார் விசாரிக்கின்றனர். இதுதொடர்பாக சிஐடி போலீசார் நேற்று கொல்கத்தாவில் உள்ள மம்தா பானர்ஜின் காளிகட் வீடு மற்றும் அலுவலகத்திற்கு நேரில் சென்று சோதனை நடத்தினர்.

Tags : Yusuf Pathan ,Amit Shah ,Trinamool Congress ,Mamata ,New Delhi ,Kalyan Banerjee ,Kirti Azad ,BJP ,West Bengal… ,
× RELATED மம்தா பானர்ஜி வீட்டில் சோதனை...