பேரணாம்பட்டு, ஜூன் 8: பேரணாம்பட்டு அருகே வன விலங்குகளை வேட்டையாட வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கிகளுடன் சுற்றித்திரிந்த இருவரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த மேல்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பொகளூர் கிராமத்தில் உள்ள மலையடிவாரத்தில் இரண்டு பேர் நாட்டு துப்பாக்கிகளை வைத்திருப்பதாக மேல்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மேல்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்ததில், பொகளூர் கிராமத்தில் உள்ள காலபைரவர் கோயில் மலை அடிவாரத்தில் 2 பேர் நாட்டு துப்பாக்கிகளுடன் சுற்றித்திரிந்தது தெரியவந்தது.
அவர்களை போலீசார் மடக்கி பிடித்து அவர்களிடம் இருந்த 2 நாட்டு துப்பாக்கிகள், 20 ஈயம் குண்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் தீவிர விசாரணையில், அணைக்கட்டு தாலுகா வரதலம்பட்டு கிராமத்தை சேர்ந்த பாபு (24), ஊனை மோட்டூர் கிராமத்தை சேர்ந்த புகழேந்தி(40) ஆகிய இருவரும் மலைவாழ் மக்கள் என்பது தெரியவந்தது.
மேலும் இருவரும் சென்டரிங் தொழில் செய்து வருவதும், பொகளூர் கிராமத்திற்கு வந்து வன விலங்குகளை வேட்டையாடி வருவது வழக்கமாக வைத்துள்ளனர் என தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
