×

நரம்பு சுருட்டல் நோய் தடுப்பு முறைகள் என்ன?

நன்றி குங்குமம் டாக்டர்

இன்றைய வேகமான வாழ்க்கை முறை, உடற்பயிற்சி குறைவு, நீண்ட நேரம் ஒரே நிலையில் அமர்ந்து வேலை செய்வது போன்ற காரணங்களால் தற்போது பலருக்கும் நரம்பு சுருட்டல் நோய் (வெரிகோஸ் வெயின்) பிரச்னை அதிகரித்து வருகின்றன. இந்த நோய் பெரும்பாலும் கால்கள், கைகள், கழுத்து மற்றும் முதுகுப் பகுதிகளில் உள்ள நரம்புகளில் வலி, பிடிப்பு மற்றும் சுருக்கம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. இது வயதானவர்களுக்கு மட்டுமல்லாமல் இளம் வயதினரிடமும் இந்த பிரச்னை தற்போது அதிகம் காணப்படுகிறது. இதற்கான காரணங்கள் என்ன தீர்வு என்ன என்பதை காண்போம்.

நரம்புகள் என்பது உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் தகவல்களை எடுத்துச் செல்லும் முக்கிய அமைப்பாகும். இந்த நரம்புகளில் அழுத்தம் அல்லது சுருக்கம் ஏற்பட்டால் உடலின் இயல்பான செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக அதிக நேரம் நின்று வேலை செய்வோர், கணினி முன் நீண்ட நேரம் அமர்பவர்கள், உடல் எடையை கட்டுப்படுத்தாதவர்கள் ஆகியோருக்கு இந்த நோய் வர வாய்ப்பு அதிகம்.

காரணங்கள்

நரம்பு சுருட்டல் நோய்க்கு பல காரணங்கள் உள்ளன. உடலில் கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற சத்துகள் குறைவாக இருப்பது முக்கிய காரணமாகும். அதேபோல் போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, தசை பலவீனம், உடற்பயிற்சி இல்லாமை, அதிக உடல் பருமன், சர்க்கரை நோய் மற்றும் ரத்த ஓட்டக் குறைபாடுகள் ஆகியவையும் இந்த நோயை உருவாக்குகின்றன. சில நேரங்களில் திடீரென அதிக உடற்பயிற்சி செய்வதும் அல்லது கனமான பொருட்களை தூக்குவதும் கூட நரம்புகளில் அழுத்தத்தை ஏற்படுத்தி நரம்பு சுருட்டல் நோய் ஏற்பட காரணமாகிறது.

நரம்பு சுருட்டல் நோய் ஒரு தீவிரமான மருத்துவ நிலையாக கருதப்படுவதில்லை. ஆனால் அவை வலி மிகுந்ததாகவும் நோயாளிக்கு அசெளகரியத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது.
வெரிகோஸ் வெயின் பொதுவாக எந்த வயதினருக்கும் ஏற்படலாம். இதற்கான ஆபத்து காரணிகளாக பார்க்கப்படுவது குடும்ப வரலாறு, நீண்ட நேரம் நிற்பது அல்லது நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பது. நீண்ட நேரம் ஒரே நிலையில் இருப்பது போன்றவற்றால் ஏற்படுகிறது.

ஏனென்றால், நீண்ட நேரம் நிற்பதும், நடப்பதும் கீழ் உடம்பில் உள்ள நரம்புகளில் அழுத்தத்தை அதிகரிக்கிறது. நரம்புகள் நமது உடலில் காற்றோட்டமைப்பின் ஒரு பகுதியாகும். அவை உடலின் திசுக்கிளில் இருந்து ஆக்ஸிஜன் இல்லாத ரத்தத்தை இதயத்திற்கு கொண்டு செல்கின்றன. இந்த நரம்புகள் காலப்போக்கில் சேதம் அடைந்தாலோ அல்லது பலவீனம் அடைந்தாலோ இதயத்தை நோக்கி திரும்பிச் செல்வதற்கு பதிலாக ரத்தம் பின்வாங்கி நரம்புகளில் தேங்கி வீக்கத்திற்கு வழிவகை செய்கிறது. இதன் காரணமாகவே, வெரிகோஸ் வெயின் ஏற்படுகிறது.

கர்ப்பிணிகளையும் பாதிக்கும்

கர்ப்பத்தின்போது, வயிற்றில் கரு வளர்வதால் எடை அதிகரிக்கிறது. இதனால் வயிறு மற்றும் கால்களில் உள்ள நரம்புகளில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால்தான் பல பெண்கள் கர்ப்ப காலத்தில் நரம்பு சுருட்டல் நோயால் பாதிக்கப்படுகின்றனர். இது பிரசவத்திற்கு பிறகு மூன்று அல்லது முதல் 10 மாதங்களுக்கு பின் தன்னிச்சையாகவே குணமாகும். அதுபோன்று பல பெண்களுக்கு மாதவிடாய் நிறுத்தத்தின்போது, ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக ஏற்படுகின்றன.

அறிகுறிகள்

இந்த நோயின் அறிகுறிகள் ஆரம்பத்தில் சாதாரண தசை வலியாக தோன்றலாம். ஆனால் பின்னர் கால்களில் திடீர் பிடிப்பு, இரவில் தூங்கும் போது வலி, கைகளில் ஊசி குத்துவது போன்ற உணர்வு, நடக்கும் போது சிரமம், முதுகு மற்றும் கழுத்து வலி போன்றவை அதிகரிக்கலாம். சிலருக்கு நரம்பு இழுக்கும் உணர்வு காரணமாக உடலை சீராக நகர்த்த முடியாத நிலையும் ஏற்படலாம். நீண்ட காலமாக கவனிக்காமல் விட்டால் உடலின் இயக்க திறன் குறையும் அபாயமும் உள்ளது.

தவிர்க்கும் வழிகள்

நரம்பு சுருட்டல் நோயைத் தவிர்க்க வாழ்க்கை முறையில் மாற்றங்கள் அவசியம். தினமும் குறைந்தது அரை மணி நேரம் நடைபயிற்சி அல்லது லேசான உடற்பயிற்சி செய்வது நரம்புகளின் செயல்பாட்டை மேம்படுத்தும். நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வோர் இடையிடையே எழுந்து நடக்க வேண்டும். உணவுப் பழக்கமும் இந்த நோயை கட்டுப்படுத்த முக்கிய பங்கு வகிக்கிறது. பால், முட்டை, வாழைப்பழம், கீரை வகைகள், பருப்பு, பாதாம் போன்ற சத்தான உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதிக எண்ணெய், ஊறுகாய், பலகாரங்கள், ஐஸ்க்ரீம், பரோட்டா, குளிர் பானங்கள் மற்றும் ஜங்க் உணவுகளை தவிர்ப்பது நல்லது. உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் நரம்பு அழுத்தத்தை குறைக்கும். உடலுக்கு தேவையான தண்ணீரை தினமும் போதுமான அளவில் குடிப்பதும் மிகவும் முக்கியம்.

வலி அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகுவது அவசியம். மருத்துவர் ஆலோசனைப்படி உடற்பயிற்சி, மருந்துகள் அல்லது பிசியோதெரபி சிகிச்சைகள் வழங்கப்படலாம். சில நேரங்களில் ஸ்கேன் மூலம் நரம்பு பாதிப்பு அளவை பரிசோதிக்க வேண்டியிருக்கும். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் இந்த நோயை எளிதாக கட்டுப்படுத்த முடியும்.மொத்தத்தில், நரம்பு சுருட்டல் நோய் என்பது கவனிக்காமல் விடக்கூடாத உடல்நலப் பிரச்சினையாகும். சரியான உணவு, ஒழுங்கான உடற்பயிற்சி மற்றும் நல்ல வாழ்க்கை முறையைப் பின்பற்றினால் இந்த நோயைத் தடுப்பதோடு உடல்நலத்தையும் பாதுகாக்க முடியும்.

நரம்பு சுருட்டு நோய் இருப்பவர்கள் கால்களை மடக்கி நீண்ட நேரம் உட்காருவதை தவிர்க்க வேண்டும். கால்களை மடக்கும்போது அது ரத்த ஓட்டத்தை தடை செய்வதன் பிரச்னையை
அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.அதற்கு பதிலாக ஓய்வெடுக்கும் நேரங்களில் கால்களை தலையணை அல்லது உயரமான இடத்தில் வைத்துக் கொள்வது நல்லது. இப்படி செய்வதால் ரத்த ஓட்டத்தில் முன்னேற்றம் ஏற்படும். இவை போன்ற எளிய சிகிச்சை கூட பலனளிக்கும்.

எளிய வீட்டு வைத்தியங்கள்

ஆப்பிள் சிடர் வினிகர் (Apple Cider Vinegar): நரம்புகளில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த இது உதவுகிறது. வினிகரை தண்ணீரில் கலந்து, நரம்பு சுருட்டல் உள்ள இடங்களில் கீழிருந்து மேல் நோக்கி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.விளக்கெண்ணெய் மசாஜ்: சிறிதளவு விளக்கெண்ணெயை (Castor oil) லேசாகச் சூடாக்கி, பாதிக்கப்பட்ட காலில் கீழிருந்து மேல்நோக்கி மென்மையாகத் தடவி மசாஜ் செய்யவும். இது நரம்புகளில் உள்ள அழுத்தத்தைக் குறைத்து, ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்.

மூலிகை பற்று: மஞ்சள், கருந்துளசி, வசம்பு மற்றும் கற்றாழை ஆகியவற்றைச் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும். இதனை நரம்பு சுருட்டல் உள்ள இடங்களில் பற்று போல போட்டு வர, வீக்கம் மற்றும் வலி குறையும்.நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி: தினமும் தவறாமல் காலை மற்றும் மாலை வேளையில் நடைப்பயிற்சி மேற்கொள்வது கால்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.தரையில் படுத்துக்கொண்டு கால்களை காற்றில் மிதிப்பது போன்ற பயிற்சிகள் (Cycling) நரம்புகளுக்கு நல்ல பலனைத் தரும்.

 

Tags : Saffron ,
× RELATED நீண்ட நேரம் அமர்தல்… புதிய புகைப்பழக்கம்!