×

இந்த வார விசேஷங்கள்

6.6.2026 – சனி பாம்பன் சுவாமிகள் குருபூஜை

பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் ராமேஸ்வரத்தில் பிறந்து வடமொழி, தென்மொழி இரண்டிலும் புலமைபெற்று முருகனை வழிபட்டு வந்த மகான். தனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும் முருகனுக்கும் தம் பாடல்களாலும், சாத்திரங்களாலும் தொண்டாற்றினார். முருகனின் வழிபாடாக இவர் இயற்றிய பாடல்கள் 6666. இவை ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவர் இயற்றிய சண்முக கவசம் புகழ்பெற்றது. பாம்பன் சுவாமிகள் மே 30, 1929 ல் சமாதி அடைந்தார். அவரது சமாதி சென்னை, திருவான்மியூரில் உள்ளது. அவர் குரு பூஜை இன்று.

7.6.2026 – ஞாயிறு தேய்பிறை சஷ்டி

தேய்பிறை சஷ்டி முருகப்பெருமானை வழிபட உகந்த ஒரு புனித நாளாகும். பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் ஆறாவது திதியே தேய்பிறை சஷ்டி ஆகும். இந்த நாளில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால், கடன் தொல்லை, நோய் மற்றும் எதிரிகள் தொடர்பான பிரச்னைகள் நீங்கி நிம்மதியும், மன அமைதியும் கிடைக்கும்.அதிகாலையில் நீராடி, வீட்டில் உள்ள முருகனின் படத்திற்கு அல்லது வேலுக்குப் பால் அல்லது திருநீறு அபிஷேகம் செய்து பூக்களால் அலங்கரிக்க வேண்டும்.நாள் முழுவதும் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது சிறப்பு. நாள் முழுவதும் உணவு உட்கொள்ளாமல் பால், பழங்கள் மட்டும் அருந்தி விரதம் இருக்கலாம். மாலை அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபட வேண்டும்.

7.6.2026 – ஞாயிறு பானு சப்தமி

ஞாயிற்றுக் கிழமையும் சப்தமி திதியும் இணைந்து வரும் மிகச்சிறப்பான நாள் பானு சப்தமி என்று அழைக்கப்படுகிறது. ‘பானு’ என்றால் சூரியன். சூரிய பகவானுக்கு உரிய ஞாயிற்றுக்கிழமையும், அவருக்கு உகந்த சப்தமி திதியும் கூடிவரும் இந்த நாள், சூரிய கிரகணத்திற்கு இணையான புண்ணிய பலன்களைத் தரக்கூடியதாக ஆன்மிக சாஸ்திரங்களில் கருதப்படுகிறது.

இந்த நாளில் செய்யப்படும் தான தர்மங்கள் மற்றும் வழிபாடுகள் ஆயிரம் மடங்கு பலன்களைத் தரும். பானு சப்தமி நாளில் பித்ரு தர்ப்பணம் செய்வது, சூரிய கிரகணத்தின் போது செய்யப்படும் தர்ப்பணத்திற்கு நிகராகக் கருதப்படுகிறது. இந்நாளில் விரதமிருந்து சூரிய பகவானை வழிபட்டால் கண் நோய்கள் நீங்குவதோடு, நீண்டகால நோய்களிலிருந்து விடுபடலாம்.

அதிகாலையில் புனித நதிகளிலோ அல்லது வீட்டிலோ நீராடி, சூரிய உதயத்தின் போது சூரிய பகவானுக்கு அர்க்கியம் (நீர்) வழங்க வேண்டும்.சூரிய வெளிச்சம் படும்படியான திறந்த வெளியில் கோதுமையால் செய்த இனிப்புகளை சூரியனுக்குப் படைப்பது விசேஷமாகும்.ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம், காயத்ரி மந்திரம் போன்றவற்றை உச்சரிப்பது மிகுந்த நன்மைகளைத் தரும்.

10.6.2026 – புதன் ரேவதி நட்சத்திரம் நம்பெருமாள் புறப்பாடு

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் அருள் மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் ஒவ்வொரு மாதமும் வரும் ரேவதி நட்சத்திரத்தன்று(நம்பெருமாள் நட்சத்திரம் ரேவதி) நம்பெருமாள் சிறப்பு ஆஸ்தான மண்டபத்திற்கு எழுந்தருளி, திருமஞ்சனம் மற்றும் வீதி புறப்பாடு கண்டருளுகிறார்.

11.6.2026 – வியாழன் புருஷோத்தம ஏகாதசி

சாதாரண வருடங்களில் வரும் 24 ஏகாதசிகளை விட முற்றிலும் மாறுபட்டது. சந்திர நாட்காட்டியின்படி, தோராயமாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் “அதிக மாசம்” (கூடுதல் மாதம் அல்லது மலமாசம்) என்று அழைக்கப்படும் மாதத்தில் மட்டுமே இந்த ஏகாதசி வரும். இந்த அதிக மாதத்திற்கு “புருஷோத்தம மாதம்” என்ற பெயரும் உண்டு. இதனால், இந்த மாதத்தில் வரும் ஏகாதசி புருஷோத்தம ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஏகாதசிக்குரிய அதிபதி மகாவிஷ்ணு (புருஷோத்தமன்) ஆவார். இந்த நாளில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும், “ஓம் நமோ நாராயணாய” என்னும் மந்திரத்தை ஜெபிப்பதும் அளப்பரிய பலன்களைத் தரும்.தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் நீங்கி, வாழ்வில் அமைதியும் நிம்மதியும் கிடைக்கும்.

இந்த ஒரு ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிப்பது, பல அசுவமேத யாகங்களைச் செய்ததற்கு இணையான புண்ணியத்தைத் தரும் என்று புராணங்கள் கூறுகின்றன.பிறவிப் பெருங்கடலை நீந்தி, பகவானின் திருவடியாகிய வைகுண்ட பதவியை அடைய இந்த விரதம் வழிவகுக்கும்.ஏகாதசிக்கு முதல் நாளான தசமி அன்றே அசைவ உணவுகள், வெங்காயம், பூண்டு போன்றவற்றைத் தவிர்த்து சாத்வீக உணவை உட்கொள்ள வேண்டும்.ஏகாதசி அன்று அதிகாலையில் நீராடி, பெருமாளை வழிபட்டு, நாள் முழுவதும் உபவாசம் (பட்டினி) இருப்பது சிறப்பு.

உடல்நிலை இடம்கொடுக்காதவர்கள் பழங்கள், பால் உட்கொள்ளலாம். இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து (ஜாகரணம்) பகவானின் கதைகளையும், பாடல்களையும் கேட்பது வழக்கம்.மறுநாள் துவாதசி அன்று காலையில் நெல்லிக்காய், அகத்திக் கீரை, சுண்டைக்காய் உள்ளிட்ட சாத்வீக உணவுகளுடன் “பாரணை” செய்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

இந்த ஏகாதசிக்குரிய அதிபதி மகாவிஷ்ணு (புருஷோத்தமன்) ஆவார். அதிக மாதத்தில் சுப காரியங்கள் (திருமணம், காதுகுத்து போன்றவை) தவிர்க்கப்பட்டாலும், ஆன்மிக வழிபாட்டிற்கு இந்த மாதம் மிக உன்னதமானதாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும், “ஓம் நமோ நாராயணாய” என்னும் மந்திரத்தை ஜெபிப்பதும் அளப்பரிய பலன்களைத் தரும்.

11.6.2026 – வியாழன் குருவித்துறை குரு பாலாபிஷேகம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு குரு பரிகார ஸ்தலமாகும். பொதுவாக நவக்கிரகங்களில் ஒருவராக இருக்கும் குரு பகவான், இங்கு தனி சந்நதியில் வீற்றிருக்கிறார். அதுமட்டுமன்றி, பெருமாளை நோக்கி தவம் இருக்கும் கோலத்தில், குரு பகவானும் கச்சனும் ஒரே சந்நதியில் காட்சியளிப்பது இங்கு மட்டுமே உள்ள தனிச் சிறப்பாகும். குரு தசை நடப்பவர்கள், குரு தோஷம் உள்ளவர்கள் மற்றும் கல்வி, திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வந்து குரு பகவானை தரிசித்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அன்று குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். குறிப்பாக, குரு பெயர்ச்சி நாட்களிலும், மகா சிவராத்திரி, மார்கழி மாத குரு வாரங்களிலும் இக்கோவிலில் லட்சார்ச்சனை மற்றும் பிரம்மாண்ட பாலாபிஷேகம் நடைபெறும். பக்தர்கள் தங்கள் கைகளால் கொண்டு வரும் பசும்பாலால் குரு பகவானுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த பாலாபிஷேகத்தை தரிசிப்பது நம் வாழ்வில் உள்ள அறியாமை நீங்கி, மங்களகரமான சுப காரியங்கள் கைகூட வழிவகுக்கும் என்பது நம்பிக்கை.

12.6.2026 – வெள்ளி பிரதோஷம்

வெள்ளிக் கிழமையில் வரும் பிரதோஷ வழிபாடு “சுக்கிரவார பிரதோஷம்” என்று அழைக்கப்படுகிறது. இது கடன் பிரச்னைகளைத் தீர்த்து, செல்வ வளம் மற்றும் குடும்பத்தில் சுபிட்சத்தை அள்ளித் தரும் மிகச் சிறப்பான நாளாகும். சிவாலயங்களில் மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை உள்ள பிரதோஷ நேரம் வழிபாட்டிற்கு மிகவும் உகந்ததாகும்.பிரதோஷ வேளையில் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை சாற்றி, நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.சிவபெருமானுக்குப் பால், இளநீர் போன்ற அபிஷேகப் பொருட்களை வழங்கி தரிசனம் செய்யலாம். நந்திக்கு வெல்லம் கலந்த பச்சரிசி அல்லது எலுமிச்சை சாதம்
நிவேதனமாகப் படைப்பது வழக்கம்

12.6.2026 – வெள்ளி கழற்சிங்க நாயனார் குருபூஜை

பல்லவ நாட்டை ஆண்ட கழற்சிங்கர் என்பவர் ஒரு குறுநில மன்னர். சிவ பக்தர் ஒரு சமயம் மன்னர் திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் தியாகேசப் பெருமானைச் தரிசனம் செய்ய எண்ணினார். தமது மனைவி, பரிவாரங்களுடனும் திருவாரூரை அடைந்தார். திருக்கோயிலை வலம் வந்து கொண்டிருந்த அவர் மனைவி (அரசி) மலர் தொடுத்துக் கொண்டிருக்கும் மணிமண்டபத்திற்கு அருகே வந்தாள். அங்கு தன்னையறியாதவாறு தரையில் கிடந்த மலர் ஒன்றை எடுத்து முகர்ந்து பார்த்தாள்.

அங்கு கூடியிருந்த தொண்டருள் செருத்துணை நாயனார் என்பவர் சினம் கொண்டார். அரசியாயிற்றே என்று கூடப் பார்க்கவில்லை; அர்ச்சனைக் குரிய மலர்களை நுகர்ந்து பார்த்துப் பிழை புரிந்த அரசியாரின் மூக்கை வாளால் சீவிவிட்டார் பட்டத் தரசி மயக்கமுற்று வீழ்ந்தாள். மன்னர்க்கு இச்செய்தி எட்டியது. மன்னர் அரசியாரின் நிலையைக் கண்டார்.

சைவத் திருக்கோலத்திலே நின்றிருந்த செருத்துணையாரிடம் எமது தேவியார் செய்த பிழை யாதோ? என்று விசாரித்த மன்னன் அரசியார் எம்பெருமானுக்குரிய மலர்களை முகர்ந்து பார்த்தார் என்பதை அறிந்து, “நீங்கள் தண்டனையை முறைப்படி அளிக்கவில்லை” என்று கூறி மலரை எடுத்த அரசியாரின் மலர்க்கையை துண்டிக்க முனைய அரசரின் உயர்ந்த பக்தி நிலை கண்டு செருத்துணை நாயனார், மன்னர்க்குத் தலைவணங்க, அப்பொழுது மன்னர்க்கு அருள் செய்யத் திருவுள்ளம் கொண்டு, உமா மஹேசனாக இறைவன் ரிஷபத்தில் எழுந்தருளினார். பட்டத்தரி சியாரின் துன்பத்தை நீக்கி அருளினார். கழற்சிங்கர் நாயனாரின் குருபூஜை வைகாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. காஞ்சியில் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் இவருக்குத் தனிசந்நிதி உண்டு.

12.6.2026 – வெள்ளி பழனி போகர் சித்தர் குருபூஜை

பழநிமலை தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் மலைக்கோயில் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் போகர் சித்தர் ஜீவசமாதி அமைந்துள்ளது. வைகாசி மாதம் பரணி நட்சத் திரத்தில் அவதரித்த இவருக்கு, ஆண்டுதோறும் வைகாசி பரணி நட்சத்திரத்தன்று போகர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த குருபூஜை நாளன்று, போகர் சித்தர் பூஜித்த புவனேஸ்வரி அம்மன் மற்றும் மரகத லிங்கத்திற்குச் சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் மற்றும் ஹோமங்கள்.

Tags : Sani Bamban ,Swamikal ,Kurupuja Bamban Kumarakurudasa ,Rameshwar ,Murugan ,
× RELATED பக்தனுக்காக பகவானே செய்த நீத்தார்கடன்!