×

வேடசந்தூர் அருகே பள்ளிக்குள் புகுந்து அட்டகாசம் தலைமை ஆசிரியை அறைக்குள் மதுஅருந்தி ஆவணங்கள் எரிப்பு: வாலிபர்கள் 3 பேர் கைது

வேடசந்தூர்: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே நாககோனனூரில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கோடை விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் தலைமை ஆசிரியை சாந்தினி பள்ளி சென்று பார்த்தபோது அறைக்கதவு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த ஆவணங்கள் தூக்கி வீசப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டு கிடந்தது. மேலும் அறையின் உள்ளே ஏராளமான மதுபாட்டில்களும் கிடந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த தலைமையாசிரியை, இதுகுறித்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்தி கிராமத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் உள்ளூர், வெளியூரை சேர்ந்த இளைஞர்கள் மதுபாட்டில்களுடன் பள்ளியின் உள்ளே சென்றது தெரியவந்தது.

அதன்பேரில் அதே ஊரை சேர்ந்த நாககிருஷ்ணன் (20), பிரேம்குமார் (21), சங்கர் (20) ஆகியோரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். கோயிலாக கருதும் பள்ளியின் உள்ளேயே மது அருந்தி ஆவணங்களை எரித்த சம்பவத்தால் அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Vedasanthur ,Nagakonanur ,Dindigul ,headmistress ,Chandini ,
× RELATED திருச்செந்தூர் கோவில் முறைகேடுகள்...