×

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் எதிரொலி இந்தியாவில் காஸ் சிலிண்டர் பயன்பாடு 19% சரிவு

 

புதுடெல்லி: ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக சர்வதேச கடவழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் இருந்து பெருமளவில் எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உலகின் பல நாடுகள் நெருக்கடியில் உள்ளன. இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கிறது. குறிப்பாக சமையலுக்கு தேவையான எல்பிஜி எரிவாயு தட்டுப்பாட்டு சூழலால் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதுடன் வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் உபயோகிப்பதற்கும் முன்பதிவு உள்ளிட்டவற்றில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த சூழலில் இந்தியாவில் சமையல் காஸ் சிலிண்டர் பயன்பாடு கடந்தாண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது இந்தாண்டு மே மாதம் 19 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது. ஒன்றிய அரசின் புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில் மே மாதத்தில் சுமார் 21.2 லட்சம் மெட்ரிக் டன் சமையல் காஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. கடந்தாண்டு மே மாதம் 26.2 லட்சம் மெட்ரிக் டன் பயன்படுத்தப்பட்டது. இதன் வித்தியாசம் 19.2 சதவீதமாக உள்ளது.நகர்ப்புறங்களில் காஸ் சிலிண்டர் மறுபதிவு இடைவெளி 21 நாட்களில் இருந்து 25 நாட்களாகவும், கிராமப்புறங்களில் 45 நாட்கள் வரை நீட்டிக்கப்பட்டதுமே முக்கிய காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரம் பெட்ரோல் நுகர்வு 2.8 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்தாண்டு மே மாதத்தில் 37.8 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த பெட்ரோல் பயன்பாடு நடப்பாண்டு மே மாதத்தில் 38.9 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்தது. மக்கள் பீதியில் பெட்ரோலை வாங்கி சேமித்து வைப்பதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் டீசல் பயன்பாடு கடந்தாண்டை விட ஒரு சதவிதத்திற்கும் குறைவாக அதிகரித்துள்ளது. விமான எரிபொருள் பயன்பாடு இதே காலகட்டத்தில் சுமார் 0.8 சதவீதம் குறைந்துள்ளது.

Tags : India ,US ,Iran ,New Delhi ,Strait of Hormuz ,Middle East ,
× RELATED இலங்கை முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழப்பு!