×

ஜிஎஸ்டி செலுத்தாத வியாபாரியிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய வரித்துறை அதிகாரி கைது

சென்னை, மார்ச் 6: ஜிஎஸ்டி செலுத்தாத வியாபாரியிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய மாநில வரித்துறை அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் வியாபாரி ராம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், புகார் ஒன்று அளித்தார். அதில், நான் பெரிய அளவில் தொழில் செய்து வருகிறேன். கடந்த நிதி ஆண்டுக்கான ஜிஎஸ்டி வரியை செலுத்தாத காரணத்தால், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள மாநில வரித்துறை அலுவலகத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி நான் அலுவலகம் சென்று வரித்துறை அதிகாரி செல்வக்குமாரை சந்தித்தேன்.

அப்போது, ஜிஎஸ்டி வரி செலுத்த தவறியதால் அதை சரி செய்ய ரூ.75 லட்சம் லஞ்சம் கேட்டார். இதற்காக தரகராக கோபாலகிருஷ்ணனை சந்திக்கும் படி கூறினார். அவரை சந்தித்து பேசியபோது ரூ.75 லட்சம் லஞ்சம் கேட்டார். பின் படிப்படியாக குறைத்து ரூ.20 லஞ்சம் கொடுக்க வேண்டும் என வற்புறுத்தினார். இல்லையென்றால் நீங்கள் நடத்தும் நிறுவனத்தை ஜிஎஸ்டி செலுத்தவில்லை எனக்கூறி சீல் வைத்து மூடிவிடுவேன் என மிரட்டினார். பின்னர் வேறுவழியின்றி ரூ.20 லட்சம் தருவதாகவும், முதல்கட்டமாக ரூ.5 லட்சம் தருவதாகவும் சம்மதித்தேன். எனவே, லஞ்சம் கேட்கும் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தெரிவித்து இருந்தார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய ரூ.5 லட்சத்தை ராமிடம் கொடுத்து அனுப்பினர்.

அதன்படி, நேற்று மாலை வடபழனியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை அருகே மாநில வரித்துறை அதிகாரி செல்வக்குமாரிடம் ரூ.5 லட்சத்தை வியாபாரி ராம் கொடுத்தபோது, aஅங்கு மறைந்து இருந்த டிஎஸ்பி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடியாக செல்வகுமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து லஞ்ச பணம் ரூ.5 லட்சத்தை பறிமுதல் செய்தனர். மாநில வரித்துறை அதிகாரி லஞ்சம் பெறும்போது கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
× RELATED பெட்ரோலுக்கு பணம் தர மறுத்ததால்...