×

17 வயது மாணவியை காரில் கடத்திய ரவுடி கும்பல்: புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத ஸ்ரீவைகுண்டம் போலீசார்

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவியை ரவுடி கும்பல் காரில் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் பெற்றோர் மற்றும் கிராமத்தினர் எஸ்பி அலுவலகம் முன்பு கண்ணீர் மல்க அழுது புரண்டனர். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் கோவில்பத்து பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி மணி முருகன் என்ற டப்பா மணி (33). கடந்த 1ம் தேதி மாலை வீட்டில் இருந்து கடைக்கு சென்ற 17 வயதான மாணவியை மூன்று பேர் கொண்ட கும்பலுடன் சேர்ந்து மணி முருகன் காரில் கடத்திச் சென்றுள்ளார்.

இதையறிந்த மாணவியின் பெற்றோர் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், தனது மகளை மணி முருகன் உள்ளிட்ட 3 பேர் கடத்தி சென்றதாக புகார் அளித்துள்ளனர். ஆனால் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மாணவி கடத்தப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யாமல், மாணவி காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். மூன்று நாட்களாகியும் கடத்தப்பட்ட மாணவியை கண்டுபிடிக்கவும் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை கைது செய்யவும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் நேற்று தூத்துக்குடியில் எஸ்பி அலுவலகத்திற்கு திரண்டு வந்து கடத்தப்பட்ட தங்களது மகளை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும். கடத்தலில் ஈடுபட்ட மணி முருகன் உள்ளிட்ட மூன்று பேரை உடனடியாக கைது செய்ய வேண்டும். கடத்தலில் ஈடுபட்ட மணி முருகனின் தொலைபேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் தங்களது மகளுக்கு ஆபத்து நேர்ந்திருக்கலாம். எனவே காவல்துறையினர் இந்த விஷயத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்து தனது மகளை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை
விடுத்தனர்.

முன்னதாக எஸ்பி அலுவலகம் முன்பு கடத்தப்பட்ட மாணவியின் தாய், பாட்டி கண்ணீர் மல்க உடனடியாக அவரை மீட்க வேண்டும் என தரையில் அழுது புரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவியை கடத்திச் சென்ற மணி முருகன் என்ற டப்பாமணி மீது ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் மற்றும் கஞ்சா விற்பனை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் இருப்பதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

Tags : Srivaikundam ,Thoothukudi ,Srivaikundam Kovilpathu ,
× RELATED சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக...