பீகார்: பீகார் மாநிலத்தில்1992ஆம் ஆண்டு பதிவான ஒரு கொலை முயற்சி வழக்கில், தற்போது 84 வயதாகும் தீப் ராய் என்ற முதியவருக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 25 ஆயிரம் அபத்தரமும் விதித்துத் 33 ஆண்டுகளுக்கு பின் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
84 வயதான அந்த குற்றவாளியால் சரியாக நடக்கக் கூட முடியாமல் பிறரின் உதவியோடு தட்டுத்தடுமாறி அந்த முதியவர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியே வரும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பீகார் மாநிலம் வைசாலி மாவட்டம் ராகவ்பூர் கிராமத்தில் கடந்த 1992ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி ஒரு மோதல் சம்பவம் நடந்தது. அங்கு வசித்த அதாலத் ராய் மற்றும் அவரது மனைவி ராம்சாகி தேவி ஆகியோர் வீட்டின் அருகே இருந்த பாதையில் தீப் ராய் (84) என்பவர் தனது குடும்பத்தினர் மற்றும் ஆயுதம் ஏந்திய கூட்டாளிகளுடன் சேர்ந்து உடைந்த கண்ணாடி துண்டுகளைப் போட்டதாகக் கூறப்படுகிறது. இதனை அந்த தம்பதியினர் தட்டிக்கேட்டபோது, அவர்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், 1993 ஆம் ஆண்டு மார்ச் 13ம் தேதியன்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரில், 4 பேர் தீர்ப்பு வரும் முன்பே இறந்துவிட்டனர். எஞ்சியிருந்த 84 வயதான தீப் ராயை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
இந்நிலையில், கடந்த 33 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் மாவட்ட கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கி உள்ளது. அதன்படி, தீப் ராயைக் கலவரம் செய்தல், பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் மற்றும் கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் நீதிமன்றம் குற்றவாளி என உறுதி செய்துள்ளது.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட போது, தீப் ராயின் வயது 51. தற்போது, 84. வயோதிகம் காரணமாக, மற்றவர் துணையின்றி அவரால் நடக்கக்கூட முடியவில்லை. சாதாரண வன்முறை வழக்கில் தீர்ப்பு வழங்க, 33 ஆண்டுகள் ஆனது குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
