×

போலீசாரின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி; சுய விருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபடுவது குற்றமல்ல: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

 

புதுடெல்லி: சுயவிருப்பத்தின் அடிப்படையில் பாலியல் தொழிலில் ஈடுபடும் வயது வந்தோர்களைக் குற்றவாளிகளாகக் கருத முடியாது என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்தியாவில் பாலியல் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் அவர்கள் சந்திக்கும் சட்டச் சிக்கல்கள் குறித்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. பொதுவாக பாலியல் தொழில் தொடர்பான சோதனைகளின்போது, அங்கு இருக்கும் அனைவரும் பாதிக்கப்பட்டவர்களாகவே கருதப்பட்டு, அவர்களின் விருப்பத்திற்கு மாறாகக் காப்பகங்களில் அடைக்கப்படும் நிலை இருந்து வந்தது.

குறிப்பாக ‘ஒழுக்கக்கேடான கடத்தல் தடுப்புச் சட்டத்தின்’ கீழ் 17வது பிரிவின்படி எடுக்கப்படும் நடவடிக்கைகளில், கடத்தப்பட்டவர்களுக்கும், சுயமாக இத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கும் இடையிலான வேறுபாடு கவனிக்கப்படுவதில்லை என்ற புகார் நீண்டகாலமாக இருந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், ‘சுயவிருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபடும் வயது வந்தவர்களைக் (18 வயதுக்கு மேற்பட்ட இருபாலரும்) குற்றவாளிகளாகக் கருதக்கூடாது; சோதனைகளின்போது போலீசார் அவர்களைக் காவலில் எடுக்கவோ அல்லது கட்டாயமாக மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பவோ கூடாது’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

மேலும், ‘பாலியல் தொழில் தொடர்பாகப் பிடிபடுபவர்களை மாஜிஸ்திரேட்டுகள் விசாரிக்கும்போது, அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டார்களா அல்லது சுயவிருப்பத்தின் பேரில் செய்கிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். பாதுகாப்பு அச்சுறுத்தல் போன்ற விதிவிலக்கான நேரங்களில் மட்டுமே அவர்களின் விருப்பத்திற்கு மாறாகச் செயல்பட முடியும். ஒருவரின் கண்ணியம் மற்றும் தன்னாட்சியைப் பாதுகாப்பது அவசியம். எனவே கடத்தல் மற்றும் கட்டாயப்படுத்துதலுக்கு எதிராக மட்டுமே சட்ட நடவடிக்கை இருக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

Tags : Supreme Court ,NEW DELHI ,India ,
× RELATED ஏற்கனவே சமூக சேவை செய்து வரும்...