சிதம்பரம், ஜூன் 2: ஓட்டல் உரிமையாளர் முகத்தில் மிளகாய் பொடி தூவி பெண்ணிடம் தங்க செயின் பறிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்கு மெயின்ரோடு நடராஜர் கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன் மகன் ராஜசுந்தரம்(60). இவரது மனைவி ஜெயந்தி(57). இவர்கள் வடக்கு மெயின்ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு ஓட்டலை மூடும்போது, வாலிபர் ஒருவர் வந்து தோசை பார்சல் வேண்டும் என கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சாப்பாடு ஆர்டர் கொடுக்க வேண்டும் எனவும் கூறியதாக தெரிகிறது. இதற்கு கடை உரிமையாளர் நாளை வாருங்கள் நேரம் ஆகிவிட்டது என கூறியுள்ளார். தொடர்ந்து அந்த நபர் 5 நிமிடம் இருங்கள் என கூறி பேச்சு கொடுத்துள்ளார்.
அப்போது ராஜசுந்தரம் கடையில் உள்ள மின்விளக்கை அனைக்க சென்றபோது, கணவன், மனைவி இருவர் முகத்திலும் அந்த வாலிபர், தான் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை தூவிவிட்டு, ஜெயந்தி கழுத்தில் இருந்த 2.5 பவுன் தாலி செயினை பறிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவர்கள் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். இதை பார்த்த அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். அவரை பின் தொடர்ந்து சென்ற பொதுமக்கள் அம்பலத்தாடி மட தெருவில் அந்த நபரை மடக்கி பிடித்தனர்.
அப்போது அந்த வாலிபர் கையில் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டியும், அவரது கையை அவரே கிழித்துக்கொண்டு மிரட்டியுள்ளார். தகவல் அறிந்த நகர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மிளகாய் பொடி தூவி செயின் பறிப்பில் ஈடுபட முயன்றவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், அவர் சேத்தியாத்தோப்பு அருகே பெரியகுப்பம் பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் சந்தோஷ்குமார்(26) என்பது தெரியவந்தது. இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் ராஜசுந்தரம் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷ்குமாரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
