சண்டிகர்: பஞ்சாபில் ஒப்பந்த ஊழியர்களின் சுரண்டலைத் தடுக்க 65,048 பேரை பணி நிரந்தரம் செய்ய மாநில அமைச்சரவை வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்புதலை வழங்கியுள்ளது. பஞ்சாப் மாநில அரசுத் துறைகளில் ஒப்பந்த அடிப்படையிலும், அவுட்சோர்சிங் முறையிலும் பணிபுரியும் ஊழியர்கள் தங்களுக்கு நடக்கும் சுரண்டல்கள் மற்றும் பிரச்னைகள் குறித்து அரசுக்கு தொடர்ந்து புகார்களை அனுப்பி வந்தனர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஆம் ஆத்மி கட்சி தலைவரான முதல்வர் பகவந்த் மான் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், மாநில அரசுத் துறைகளில் ஒப்பந்த நியமன முறையை ஒழித்து 65,048 ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான இரண்டு புதிய மசோதாக்களுக்கு மாநில அமைச்சரவை ஒருமனதாக ஒப்புதல் வழங்கியுள்ளது.
அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பகவந்த் மான் கூறுகையில், ‘பஞ்சாபில் ஒப்பந்த முறையை ஒழிப்பது என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை அமைச்சரவை எடுத்துள்ளது; இதன் மூலம் 51 அரசுத் துறைகளில் பணிபுரியும் 65,048 அவுட்சோர்சிங் ஊழியர்கள் நேரடியாக பயனடைவார்கள். மேலும், பஞ்சாப் மாநில அவுட்சோர்சிங் பணியாளர்கள் மசோதா 2026ம் ஆண்டு மற்றும் பஞ்சாப் மாநில ஒப்பந்த பணியாளர்கள் மசோதா 2026ம் ஆண்டு ஆகியவை விரைவில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளன. இதற்கான அவசரச் சட்டம் முதலில் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, பின்னர் முறைப்படி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்’ என்று அவர் தெரிவித்தார்.
