×

நார்வே செஸ் கார்ல்சனிடம் வீழ்ந்த குகேஷ் மற்றொரு போட்டியில் பிரக்ஞானந்தா அபாரம்

ஓஸ்லோ: நார்வே செஸ் 4வது சுற்றுப் போட்டியில் நேற்று, தமிழகத்தை சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ், உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனிடம் தோல்வி அடைந்தார். மற்றொரு போட்டியில் பிரக்ஞானந்தா, ஜெர்மனி வீரர் வின்சென்ட் கீமரை வீழ்த்தினார். நார்வேயின் ஓஸ்லோ நகரில் நார்வே செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. 4வது சுற்றுப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டரும் நடப்பு உலக செஸ் சாம்பியனுமான குகேஷ், நார்வேயை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சன் மோதினர்.

இப்போட்டியில் சிறப்பாக ஆடிய கார்ல்சன், சாமர்த்தியமாக காய்களை நகர்த்தி குகேஷை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, ஜெர்மனியை சேர்ந்த வின்சென்ட் கீமருடன் மோதினார். இப்போட்டியின் துவக்கம் முதல் சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்திய பிரக்ஞானந்தா, கீமரை வீழ்த்தி அசத்தினார். இன்னொரு போட்டியில், புள்ளிப்பட்டியலில் முன்னிலை வகிக்கும் பிரான்சின் அலிரெஸா ஃபிரோஜ்ஸா, அமெரிக்க வீரர் வெஸ்லி ஸோ மோதினர்.

இதில் சிறப்பாக ஆடிய வெஸ்லி, அலிரெஸாவுக்கு அதிர்ச்சி தோல்வியை பரிசளித்தார். 4 சுற்றுகள் முடிவில், அலிரெஸா 8.5 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறார். பிரக்ஞானந்தா 6 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும், வெஸ்லி ஸோ 5.5 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும் உள்ளனர். குகேஷ் 3.5 புள்ளிகளுடன் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டார்.  மகளிர் பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை கொனோரு ஹம்பி மோசமாக ஆடி, சீன வீராங்கனை ஜு ஜினெரிடம் தோல்வியை தழுவினார்.

மற்றொரு இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக், உக்ரைன் கிராண்ட் மாஸ்டர் அன்னா முஸிசுக்கிடம் தோல்வி அடைந்தார். மகளிர் பிரிவு புள்ளிப்பட்டியலில், கஜகஸ்தான் வீராங்கனை பிபிஸாரா அஸாபயேவா 7 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். திவ்யா தேஷ்முக், அன்னா முஸிசுக் தலா 5.5 புள்ளிகளுடன் 2ம் இடத்தை பிடித்தனர். கொனேரு ஹம்பி 3 புள்ளிகளுடன் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டார்.

Tags : Kukesh ,Carlsen ,Praggnanandhaa ,Oslo ,Norwegian Chess Tournament ,Tamil Nadu ,Magnus Carlsen ,Vincent Keimer ,
× RELATED ஐபிஎல் குவாலிபயர் 2 போட்டி: ராஜஸ்தான்...