சென்னை: அரசு பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இன்றைய நிலையில், அரசு பள்ளிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. அதன் விளைவு தான் அரசு பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே 50 ஆயிரத்திற்கும் கூடுதலாக காலியாக உள்ளன.
அந்த இடங்களில் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களின் மூலம் தற்காலிக ஆசிரியர்களை நியமித்து தமிழக அரசு நிலைமையை சமாளித்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில், குறிப்பாக வட மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் கல்வித் தரம் எந்த அளவுக்கு மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு இந்த மாதம் வெளியிடப்பட்ட 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தான் சான்று ஆகும்.
இதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் ஒப்புக் கொண்டிருப்பது மட்டுமின்றி, வட மாவட்டங்களில் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். அது வாக்குறுதியாக மட்டுமே இல்லாமல் செயல்வடிவம் பெற வேண்டும். தமிழ்நாட்டில் இன்றைய நிலையில், இடைநிலை ஆசிரியருக்கான தகுதித்தேர்வில் வெற்றி பெற்று 21,515 பேரும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்வில் சுமார் 50 ஆயிரம் பேரும் வெற்றி பெற்று ஆசிரியர் பணி கிடைக்காமல் காத்திருக்கின்றனர்.
தமிழக அரசு நினைத்தால், அந்த அரசுக்கு சமூகநீதியில் அக்கறையிருந்தால், கடந்த 2018ம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 149ஐ ரத்து செய்து விட்டு, தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை காலியாக உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் நேரடியாக நியமிக்க வேண்டும்.
ஆளும் தவெக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் நிரப்படும் என்று கூறப்பட்டிருக்கும் நிலையில், அதை நிறைவேற்ற வேண்டியது முதலமைச்சரின் கடமை. எனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களைக் கொண்டு, இடைநிலை மற்றும் பட்டாதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
