×

சங்கராபுரம் அருகே 300 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காசோள பயிர்கள் சேதம்.!! இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

சங்கராபுரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சமீபத்தில் கனமழை பெய்ததோடு, பலத்த சூறைக்காற்றும் வீசியது. இதன் காரணமாக சங்கராபுரம் பகுதியில் சுமார் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த மக்காசோள பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தன.

சங்கராபுரம் பகுதியில் பலத்த காற்றுடன் சுமார் 2 மணிநேரம் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக கொசப்பாடி, அரசம்பட்டு, புதுபாலப்பட்டு, மோட்டாம்பட்டி, பாச்சேரி, பொய்க்குடம் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த மக்காசோள பயிர்கள் அறுவடைக்கு தயாராகி வந்த நிலையில், திடீரென கொட்டி தீர்த்த கனமழை மற்றும் மற்றும் வீசிய பலத்த சூறைக்காற்றால் அவை சேதமடைந்தன.

தாங்கள் ஏக்கருக்கு சுமார் ரூ.30,000 செலவிட்டு மக்காசோளத்தை பயிரிட்டதாகவும், தற்போது பெரும் இழப்பை சந்தித்து இருப்பதாகவும் சங்கராபுரம் பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்து உள்ளனர். மேலும் அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் இப்படி பயிர்கள் நாசமாகி இருப்பதால், முதலீடு செய்த பணம் முழுவதும் வீணாகியுள்ளது.

எனவே தங்களின் நிலையை உணர்ந்து அரசு இந்த சூழலை சமாளிக்க உரிய இழப்பீடு அல்லது நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கேட்டு கொண்டு உள்ளனர். இதனிடையே ஆரம்பக்கட்ட தகவல்களில் 300 ஏக்கர் என மதிப்பிடப்பட்ட சேத அளவு, விரிவான ஆய்வுக்குப் பின் 400 ஏக்கருக்கும் அதிகமாக பதிவாக கூடும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

Tags : Sankarapuram ,Kallakurichi district ,
× RELATED நாகை, கோடியக்கரையில் இருந்து நேற்று மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்கள் மாயம்