×

மேகதாது அணை பிரச்னை அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க வேண்டும்: தலைவர்கள் வலியுறுத்தல்

 

சென்னை: மேகதாது அணை பிரச்னை தொடர்பாக, அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கையால் தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைப்பது அரிதாகி, காவிரி டெல்டா பகுதிகள் மிகவும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில், தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்த வேண்டும் என்றும், காவிரி நதி நீர் விவகாரத்தில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): காவிரி நடுமன்ற தீர்ப்பிற்கு எதிராக கர்நாடக அரசு, மேகதாதுவில் அணை கட்டும் முயற்சிகளை தொடர்ந்து வருகிறது. மேகதாது அணை பிரச்னை தொடர்பாக கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் கடந்த 24ம்தேதி தள்ளுபடி செய்துள்ளது.எனவே, தமிழ்நாட்டின் தண்ணீர் உரிமை பறிபோகும் பேராபத்து ஏற்பட்டுள்ள நிலையில், மேகதாது அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்துவது தொடர்பாக, உடனடியாக தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி, அடுத்தகட்ட அரசியல் மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும்.

டிடிவி.தினகரன் (அமுமக): மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை தடுத்து நிறுத்திடும் வகையில் தொடர் சட்ட நடவடிக்கைகள் எடுத்திட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவுறுத்தியிருப்பது, கடந்த காலங்களைப் போல வெறும் சம்பிரதாய அறிக்கையாக அமைந்திடக் கூடாது.

கர்நாடக காங்கிரஸ் அரசின் மேகதாது அணை திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், காவிரி டெல்டா பகுதிகள் முழுவதும் பாலைவனமாவதோடு, விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும், தமிழகத்தின் பல மாவட்ட மக்களுக்கான குடிநீர் தேவையும் கேள்விக்குறியாகிவிடும்.

எனவே, மேகதாது அணை விவகாரத்தில் சட்டரீதியாக மட்டுமல்லாது, தவெகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் மேலிடம் மூலம் அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டுவதோடு, காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழகத்திற்கான உரிய நீர் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும்.

அன்புமணி (பாமக தலைவர்): காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இதன் மூலம் மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை மத்திய அரசு ஆய்வு செய்யும் நிலை உருவாகியிருப்பது தமிழகத்திற்கு பின்னடைவு ஆகும்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து மேகதாது அணை குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அங்கு தமிழகத்திற்கு எதிர்ப்புக்கு பயன் இல்லாமல் போகலாம். உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்றம் அளித்தத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் மேகதாது அணை கட்ட ஆணையம் அனுமதி அளித்தால் அத்துடன் தமிழகத்தின் உரிமைகள் குழி தோண்டி புதைக்கப்பட்டு விடும்.

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை காக்கவும், மேகதாது அணை கட்டப்படுவதை தடுத்து நிறுத்தவும் மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசு அளித்த அனுமதியை ரத்து செய்ய வைப்பது தான். அதற்காக ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு தொடர் அரசியல் அழுத்தம் தர வேண்டும்.

Tags : Mekedadu ,Chennai ,Tamil Nadu ,Karnataka government ,Mekedadu dam ,Cauvery ,
× RELATED பாகுபாடு இன்றி அனைத்து விவசாயிகளின்...