தூத்துக்குடி: விளாத்திக்குளம் அடுத்த வேடநத்தம் பிளஸ்2 மாணவி பலாத்காரம் செய்து ெகாலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 76 நாட்களில் இரட்டை தூக்கு தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்தது. தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அடுத்த குளத்தூர், வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்2 மாணவி, கடந்த மார்ச் 10ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் மாயமானார். மறுநாள் உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தூத்துக்குடி ராஜபாண்டி நகர் பகுதியை சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற மாவீரனை (38) மார்ச் 19ம் தேதி மாணவி கொலை வழக்கில் கைது செய்தனர். அவர் மீது கொலை, பாலியல் வன்புணர்ச்சி, தடயங்களை மறைத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிந்து மதுரை சிறையில் அடைத்தனர்.
டிஎன்ஏ பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் குளத்தூர் போலீசார் கடந்த மார்ச் 31ல் தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதி பிரீத்தா முன் இந்த வழக்கு, கடந்த 5ம் தேதி விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு குறித்து 71 சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. கடந்த 21ம் தேதி விசாரணை நிறைவடைந்தது. இந்த வழக்கில் தூத்துக்குடி மாவட்ட போக்சோ கோர்ட்டில் நேற்று காலை 11 மணி அளவில் நீதிபதி பிரீத்தா அளித்த தீர்ப்பில் தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என்று அறிவித்தார். தண்டனை விவரங்களை பகல் 12.45 மணிக்கு நீதிபதி பிரீத்தா வாசித்தார். தீர்ப்பில் நீதிபதி கூறியதாவது: குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு 17 வயதில் மகள் உள்ளார். அவருடைய மனைவியும், மகளும் அவரை பிரிந்து வாழ்கின்றனர்.
மகள் வயது பிள்ளையை பார்க்கும்போது அவளை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு இல்லை. அவளை பாதுகாக்கத் தவறி மிருகத்தனமாக நடந்துள்ளார். இந்தக் குற்றத்தை செய்யும் போது அவருக்கு மகள் நினைவு வராதது வேதனையளிக்கிறது. குற்றவாளியை நம்பி தாய் மட்டும் அவருடன் உள்ளார். குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்குவது முறையாக இருக்காது. அதனால் குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு பலாத்காரத்திற்கும், கொலைக்குமாக சேர்த்து இரட்டை தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கிறேன். தண்டனையை குறைக்க ஏதாவது ஒரு காரணம் இருக்குமா என்று ஆய்வு செய்தோம்.
ஆனால் குற்றவாளி ஏற்கனவே இதுபோன்று ஒரு பாலியல் மற்றும் கொலை குற்றத்தில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, மேல் முறையீட்டில் வெளியே வந்த நிலையில் மீண்டும் மாணவியிடம் கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார். இதனால் (பிஎன்எஸ் 104வது பிரிவு) கொலை செய்ததற்கு ஒரு தூக்குத்தண்டனையும், போக்சோ சட்டம் 6வது பிரிவின் கீழ் பாலியல் பலாத்காரம் செய்ததற்கு ஒரு தூக்குத் தண்டனையும், பிஎன்எஸ் 127/2 மாணவியை கொன்று மறைத்து வைத்திருந்ததற்கு சிறையில் இருந்த நாட்களை கழித்து ஓராண்டு சிறைத் தண்டைனயும் விதிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார். மாணவி பலாத்கார கொலை வழக்கு பதியப்பட்ட 76 நாட்களில் தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த வழக்கில் போலீசார், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததுடன் முக்கிய ஆவணங்களாக, பிரேத பிரசோதனை அறிக்கை, டிஎன்ஏ டெஸ்ட் முடிவு என 117 ஆதாரங்களை தாக்கல் செய்திருந்தனர். 19 பொருட்கள் ஆவணங்களாக சமர்ப்பிக்கப்பட்டு இருந்தது. சாட்சிகளாக 71 பேர் சேர்க்கப்பட்டு இருந்தனர்.
முதல்வர் விஜய் வரவேற்பு
முதல்வர் விஜய் வெளியிட்ட சமூக வலைத்தளப்பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த மார்ச் மாதம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் 71 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, துரிதமாக விசாரிக்கப்பட்டு, தர்ம முனீஸ்வரன் என்ற குற்றவாளிக்கு, பாலியல் குற்றம் மற்றும் கொலை குற்றத்திற்காக இரட்டை தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இக்கொடூர சம்பவம் நடைபெற்ற 3 மாதங்களுக்குள் மிக துரிதமாக நீதி வழங்கப்பட்டுள்ளது, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பினை உறுதி செய்திடும் அரசின் நடவடிக்கைகளுக்கு உற்ற துணையாக வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி
இந்த வழக்கை பொறுத்தவரை போக்சோ கோர்ட்டிற்கு தனி அரசு வக்கீல் இருந்தாலும் முன்னாள் முதல்வர் முக.ஸ்டாலின், இந்த வழக்கின் சிறப்பு அரசு வக்கீலாக எல்லம்மாளை நியமித்து உத்தரவிட்டு இருந்தார். சிறப்பு அரசு வக்கீல் எல்லம்மாள் அளித்த பேட்டியின்போது, இந்த வழக்கின் விசாரணை துரிதமாக நடைபெற நடவடிக்கை எடுத்த முன்னாள் முதல்வர் முக.ஸ்டாலினுக்கும் தமிழக அரசு தலைமை வக்கீலுக்கும், நெல்ைல சரக டிஐஜியாக இருந்த சரவணன், எஸ்பியாக இருந்த மதன், தற்போதைய எஸ்பி அபிேஷக் குப்தா, விசாரணை அதிகாரியான விளாத்திகுளம் டிஎஸ்பி சுந்தரபாண்டியன், இன்ஸ்பெக்டர் தனலெட்சுமி உள்ளிட்டோருக்கும் நன்றி தெரிவித்தார்.
இதுவரை தூக்கு தண்டனைகள்
கடந்த 1998ம் ஆண்டு கோயில் பிரச்னை காரணமாக இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் தருவைகுளம் பகுதியில் வந்த தனியார் பஸ் மீது வெடிகுண்டு வீசியும், தீ வைத்தும் தாக்குதல் நடந்தது. இதில் பஸ்சில் இருந்த 6 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இந்த வழக்கில் தூத்துக்குடி விரைவு நீதிமன்றம், கடந்த 2003ம் ஆண்டு 7 பேருக்கு தூக்குத் தண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறியது.
கடந்த 2012ம் ஆண்டு செய்துங்கநல்லூர் அருகே கிளாக்குளத்தை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளிக்கு செல்வதற்காக ரயிலை பிடிக்கச் செல்லும் வழியில் கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தூத்துக்குடி மாவட்டம் பாறைக்குட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு (தற்போது சஸ்பெண்டில் உள்ள எஸ்ஐ இசக்கிராஜாவின் சித்தப்பா) தூத்துக்குடி கோர்ட் தூக்குத் தண்டனை விதித்தது. தற்போது 3வது முறையாக வேடநத்தம் மாணவி கொலை வழக்கில் தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை சிறுமி பலாத்கார கொலை வழக்கில் விரைந்து தீர்ப்பு கிடைக்குமா?
கோவை விமான நிலையம் பின்புறம் கடந்த ஆண்டு நவம்பர் 2ம் தேதி 20 வயது கல்லூரி மாணவி 3 வாலிபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கு தமிழ்நாட்டில் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த சகோதரர்கள் சதீஷ் (எ) கருப்பசாமி (30), இவரது தம்பி காளீஸ்வரன்(21), இவர்களது உறவினர் குணா(20) ஆகிய 3 பேரை பீளமேடு போலீசார் காலில் சுட்டு பிடித்தனர்.
அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி ஒரு மாதத்துக்குள்ளாகவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு 4 மாதத்தில் விசாரணை முடிந்து மார்ச் 7ம் தேதி கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி சுந்தர்ராஜன், கைதான கருப்பசாமி, காளீஸ்வரன், குணா ஆகிய 3 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இதேபோல தற்போது தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே பிளஸ்2 மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கிலும் அப்போதை முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி விரைவாக விசாரணை நடத்தி 76 நாட்களில் கொலையாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. தற்போதைய தவெக ஆட்சியில் கோவையில் 11 வயது மாணவி பலாத்கார கொலை வழக்கிலும் விரைந்து தீர்ப்பு கிடைக்க முதல்வர் ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
அதிவிரைவாக நீதி கிடைக்க திமுக அரசு காரணம்: கீதாஜீவன் அறிக்கை
முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் நடைபெற்ற 20 தினங்களிலேயே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, 76வது நாளான நேற்று கொடுங்குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக அரசு தான் காரணம்.
தற்போதைய தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 15 நாட்களில் தமிழ்நாட்டில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் அரங்கேறி பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதுடன், பொதுமக்களும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். நேற்று முன்தினம் தூத்துக்குடி நகரத்திலும் இளம்பெண் ஒருவர் மூன்று நபர்களால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உள்ளார். பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வேன் என்று பேசி பிரசாரம் மேற்கொண்டு ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய் இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறார்? என தெரிவித்துள்ளார்.
யார் இந்த தர்ம முனீஸ்வரன்?
வேடநத்தம் பிளஸ்2 மாணவி கொலை வழக்கில் இரட்டை தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரவுடி தர்மமுனீஸ்வரன் என்ற மாவீரன் குறித்து பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முனியசாமி. இவது மனைவி லிங்கம்மாள். காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தர்ம முனீஸ்வரன், ஈஸ்வரன், அழகு முனீஸ்வரன் என 3 மகன்கள். தர்மமுனீஸ்வரன் 5ம் வகுப்பு வரை படித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்னரே சொந்த ஊர் பகுதியில் சிறு சிறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். திருமணமானதும் வேலைக்கு செல்லாமல் வம்பு வழக்குகளில் ஈடுபட்டுள்ளார்.
இதனால்மனைவி பிரிந்து சென்றுவிட்டார். பின்னர் கீழஈராலை சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு குடும்பம் நடத்தியுள்ளார். பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வழக்கில் 2019 பிப்ரவரி 6ல் சாயல்குடி போலீசாரால் கைது செய்யப்பட்டு 6 மாதம் சிறையில் இருந்துள்ளார். செயின்கள் அனைத்தையும் காதலி ஈஸ்வரியிடமும், அவரது மாமியார் லூர்தம்மாளிடமும் கொடுத்து அடகு வைத்து பணம் பெற்றுள்ளார். திருட்டு பைக்கில் சென்று கடந்த 2020 பிப்ரவரி 2ம் தேதி எட்டயபுரம் அருகே கீழஈரால் ஆர்.சி. தெரு புதுக்காலனியை சேர்ந்த பாப்பா (65) என்ற மூதாட்டியை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்து கொன்று கம்மல்களை திருடிச் சென்றுள்ளார்.
இந்த வழக்கில் தூத்துக்குடி மகிளா கோர்ட் கடந்த 6-8-2024ல் தர்மமுனீஸ்வரனுக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் அப்பீல் செய்து, ஜாமீனில் வந்த நிலையில் தான் விளாத்திகுளம் பிளஸ் 2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரிய வந்தது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வழக்கு விசாரணைக்காக மதுரை சிறையில் இருந்து தூத்துக்குடி கோர்ட்டிற்கு அழைத்து வரப்பட்டபோது ஊடகவியலாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆதாரங்களுடன் குற்றம் உறுதி
இந்த வழக்கில் தர்ம முனீஸ்வரனுக்கு ஆதரவாக வாதாட தூத்துக்குடியில் எந்த வக்கீலும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவருக்கு இலவச சட்ட உதவி மையம் மூலம் தான் வக்கீல்கள் வாதாடினர். இருப்பினும் நீதிபதி பிரீத்தா அரசு தரப்பு மற்றும் காவல் துறை சார்பில் சமர்பிக்கப்பட்டிருந்த ஆதாரங்கள் முழுவதினையும் கருத்தில் கொண்டு முற்றிலும் குற்றம் உறுதி செய்யப்பட்டதாலேயே தீர்ப்பு வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.
மாணவியின் பெற்றோர் அமைதி
தீர்ப்பு வெளியானதை முன்னிட்டு மாணவியின் பெற்றோர் மற்றும் அவரது ஊரை சார்ந்த சிலரும் கோர்ட்டிற்கு வந்திருந்தனர். அவர்கள் இரட்டை தூக்குத் தண்டனை அறிவிப்பை கேட்டதும் அங்கிருந்து அமைதியாக சென்றனர். குற்றவாளி தர்மமுனீஸ்வரன் என்ற மாவீரனின் தாய் லிங்கம்மாள் காலை 10 மணிக்கே கோர்ட்டிற்கு வந்திருந்தார். அவர் கோர்ட் அறையின் அருகே நிறுத்தப்பட்டு இருந்தார். பெண் போலீசார் பாதுகாப்புடன் நின்றிருந்த அவர், வக்கீல்களிடம் பேசிக் கொண்டிருந்தார். மேலும் மதியம் தீர்ப்பு வெளியானதும் அமைதியாக எதுவும் பேசாமல் நின்றார்.

