- மம்தா
- காங்கிரஸ்
- இந்தியா
- புது தில்லி
- முன்னாள்
- மேற்கு வங்கம்
- முதல் அமைச்சர்
- மம்தா பானர்ஜி
- காங்கிரஸ் கட்சி
- இந்தியா கூட்டணி
- மேற்கு
- திரிணாமுல்
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட்டு ‘இந்தியா’ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்ட மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி விருப்பம் தெரிவித்துள்ளார். இவரது முயற்சி எதிர்கட்சிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்குவங்கத்தில் நடந்த தேர்தல் தோல்விக்குப் பிறகு, திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான மம்தா பானர்ஜி தற்போது எதிர்கட்சிகளின் ஆதரவை நாடியுள்ளார். கடந்த காலங்களில் திரிணாமுல் காங்கிரசுக்கும் ‘இந்தியா’ கூட்டணிக்கும் இடையே சுமுகமான உறவு இல்லாத போதிலும், மம்தா பானர்ஜியின் தேர்தல் தோல்விக்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குரல் கொடுத்திருந்தார். பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து மம்தா பானர்ஜியின் 100 இடங்களைத் திருடிவிட்டதாக ராகுல் காந்தி அப்போது குற்றம் சாட்டினார். மகளிர் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாகக் கூட்டப்பட்ட ‘இந்தியா’ கூட்டணியின் கடைசி கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஜூன் முதல் வாரத்தில் ‘இந்தியா’ கூட்டணியின் கூட்டத்தைக் கூட்டி, ஒத்த கருத்துடைய பிற கட்சிகளையும் அதில் அழைக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக கூட்டணிக் கட்சிகளிடையே இன்னும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதுகுறித்து காங்கிரஸ் ஊடகப் பிரிவைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, தங்களுக்கு எதுவும் தெரியாது என்று அதன் தலைவர் தெரிவித்தார். அதேபோல், சமாஜ்வாதி கட்சித் தலைவர்களும் இந்த கூட்டம் குறித்து தங்களுக்குத் தகவல் இல்லை என்றும், மம்தா பானர்ஜி நேரடியாக அகிலேஷ் யாதவைத் தொடர்பு கொண்டால் மட்டுமே அதுபற்றித் தெரியவரும் என்றும் கூறியுள்ளனர். இதற்கிடையில், தமிழகத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே புதிய விரிசல் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி நடிகர் விஜய்யின் தவெகவுடன் கைகோர்த்த நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் கட்சியிடமிருந்து தங்களுக்குத் தனித்தனி இருக்கைகளை ஒதுக்கக் கோரி திமுக கடிதம் எழுதியுள்ளது. தவெகவில் தற்போது எம்பிக்கள் யாரும் இல்லாத நிலையில், அடுத்த மாதம் நடக்கும் மாநிலங்களவை இடைத்தேர்தலில் அக்கட்சிக்கு ஒரு எம்பி கிடைக்க வாய்ப்புள்ளது.
எவ்வாறாயினும், ஒன்றியத்தில் ஆட்சி செய்யும் பாஜகவை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கமே இவர்களை ஒன்றிணைக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜூன் மாத கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளே ‘இந்தியா’ கூட்டணியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்கின்றனர். அதேநேரம் காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட்டு, பாஜகவை எதிர்க்கும் திரிணாமுல், திமுக, ஆம்ஆத்மி, பிஜூ ஜனதா தளம், சமாஜ்வாதி, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ கூட்டணிக்கு புத்துயிர் ஊட்ட வியூகங்கள் வகுக்கப்பட்டு வருவதாகவும் ெடல்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தலில் கேரளாவில் காங்கிரசிடம் இடதுசாரிகள் ஆட்சியை பறிகொடுத்தனர். தமிழ்நாட்டில் திமுகவுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ், தேர்தல் முடிவுக்கு பின்னர் தவெகவுடன் கூட்டணி அமைத்து துரோகம் விளைவித்தது.
மேற்குவங்கத்தில் பாஜகவை எதிர்க்கும் காங்கிரசும், திரிணாமுல்லும் எதிரெதிர் அணியில் போட்டியிட்டன. அசாமில் காங்கிரஸ் தனித்து விடப்பட்டது. அதனால் 2029 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக, அடுத்தாண்டில் (2027) உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இந்தத் தேர்தல்கள் வழக்கமாக பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அந்த சமயத்தில் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளுக்காக, தேர்தல் தேதிகள் முன்னதாகவே நடத்தப்படலாம் என்ற ஊகங்களும் நிலவுகின்றன. எனவே காங்கிரஸ் அல்லாத ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொள்ளவும், தேர்தல் முடிவுக்கு பின்னர் சில முடிவுகளை எடுத்துக் கொள்ளவும் ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் சில தலைவர்கள் கூறிவருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
