×

அரச மரத்தைச் சுற்றினால் பிள்ளைப்பேறு கிடைக்குமா?

அரசமரம் அறிவு தரும் அருள் தெய்வம் என போற்றப்படுகிறது. பழந்தமிழில் திரு மரம் என்றழைக்கப்படும் அரச மரம் பெரும்பாலும் பல கோயில்களிலும் குளக்கரைகளிலும் வளர்ந்திருக்கும்.
நம் மக்கள் வேம்பை (வேப்ப மரம்) பெண் தெய்வமாகவும், அரச மரத்தை ஆண் தெய்வமாகவும் வணங்குவார்கள். இந்த மரம் இருக்குமிடங்களிலெல்லாம் விநாயக பெருமான் குடி கொண்டிருப்பார்.
இது வேத காலத்தில் இருந்தே புனிதமாக கருதப்பட்டது. புத்தபிரான் உட்கார்ந்து ஞானோதயம் பெற்றது அரச மரத்துக்கடியில்தான் எல்லா மரங்களுள் நான் அரச மரமாயிருக்கிறேன் என்று கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார்.
அரச மரத்தின் அடியில் பிரம்மனும் நடுவில் விஷ்ணுவும் நுனியில் சிவபெருமானும் வீற்றிருக்கிறார்கள்.
புத்திரகாரகன் குருபகவானின் விருட்சமாக அரசமரம் திகழ்கிறது. நவகிரங்களில் குரு பகவானின் விருட்சமாகவும் 12 ராசிகளில் தனுசு ராசியின் மரமாகவும் 27 நட்சத்திரங்களில் பூச நட்சத்திரத்தின் விருட்சமாகவும் அரசமரம் விளங்குகிறது.
அரச மரத்தைச் சுற்றினால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது ஒரு நம்பிக்கை. இதன் காரணமாகவே அரசனை நம்பி புருஷனை கைவிட்டாள் என்ற பழமொழி வழக்கத்தில் உள்ளது. அரசமரத்தை சுற்றிவிட்டு அடி வயிற்றை தொட்டுப் பார்த்தாள் என்ற பழமொழியும் உண்டு. அரசமரம் குலம் தழைக்கச் செய்யும். பிள்ளைப் பேற்றை உண்டாக்கும்.
அரச மரத்தை சுற்றினால் பிள்ளை பேறு கிடைக்கும் என்று ஆயிரம் ஆண்டு களுக்கு முன்னர் கூறிய உண்மையை விஞ்ஞான ரீதியாகவும் ஆங்காங்கு இன்று ஒப்புக் கொள்கிறார்கள். அரச மரத்தின் ஊடாக வெளிப்படும் அந்த காற்றானது மருத்துவரீதியாக பெண்ணிற்கு நன்மையையே செய்கிறது.
புத்திர பாக்கியம் அடைய வேண்டு மானால் பெண்கள் அரச மரத்தை பலமுறை சுற்ற வேண்டும் என்றும் அவ்வாறு செய்யும்போது வெறுமனே சுற்றி வராமல் ஒவ்வொரு சுற்று முடிந்ததும் மரத்தின் அடியில் வீற்றிருக்கும் விநாயகப் பெருமான் சிலை முன்போ அல்லது நாகர் சிலை முன்போ குனிந்து வணங்கி நமஸ்காரம் செய்தாக வேண்டும்.
ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு பெண் இப்படி நமஸ்கரிக்கும்போதும், பெண்ணின் அடிவயிறு அழுத்தப்படுகிறது. இம்மாதிரி அழுத்தப்படும்போது அந்த அடைப்பானது சிறிது சிறிதாக நீங்கி விடும். அதன் பிறகு பரிபூரணமாக தடை ஏற்படுத்தும் அடைப்பு நீங்கியவுடன் சினை முட்டைகள் எளிதாக கருப்பையை சென்று சேர்த்து விட முடியும்.
இந்தப் பயிற்சியை வீட்டிலேயே செய்யாமல் ஏன் அரசமரத்தை நாடிச் செல்ல வேண்டும்? அதற்கான விஞ்ஞான ரீதியிலான காரணத்தைப் பற்றி பார்ப்போம்.
தாவரங்களில் அதிகப்படியான பிராண வாயுவை வெளியிடும் தாவரம் அரசமரம்தான். அதற்கடுத்து வேப்ப மரம். சூரிய உதயத்தில் அரசமர பிரதட்சிணம் செய்யும்போது இம்மரத்தடியில் ஆரோக்கியமான வகையில் காற்றோட்டம் அமைந்திருக்கும். அதாவது சூரிய ஒளிக்கு முன் இம்மரத்திற்கு மேல் ஓசோன் என்னும் காற்றழுத்த மண்டலம் ஒன்று அமையப்பெற்று, பிராண வாயுவை வெளியிடாமலும் சிதற விடாமலும் மரத்தடியில் உள்ளவர்களுக்கு அளிக்கின்றது. இந்த அமைப்பு சூரிய ஒளி ஏற்பட்டவுடன் சிதறி காற்றழுத்தத்தையும் சிதைத்து விடுகின்றது. ஆகையால்தான் வீட்டில் கூடாது.
அரச மரத்தை நாடிச் சென்று அதனைப் பிரதட்சிணம் செய்ய 108 முறை முடியாவிட்டாலும் நம்மால் இயன்றவரை குளித்து நமஸ்கரித்து வந்தால் நிச்சயம் புத்திரப் பேற்றை அடைய முடியும்.
அரச மரம் வலம் வர உகந்த காலங்கள்
அரச மரத்தை விடியற் காலையில் வலம் வரவேண்டும். அதிகாலை முதல் 9:00 மணி வரையிலான பொழுதில் அரச மரத்தை ஈரத் துணியுடன் பிரதட்சிணம் செய்வது விரைவில் பலனைத் தரும்.
இந்த மரத்தை சனிக்கிழமையில் மட்டுமே தொடலாம் என்பது சாஸ்திர விதி. அமாவாசை, ஏகாதசி, சப்தமி, பஞ்சமி ஆகிய திதிகளிலும் சனி, ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய கிழமைகளிலும் அரசமரம் வலம் வருவது சிறப்பை தரும்.
அரசமரத்தை ஏழுமுறை வலம் வருதல் சாஸ்திர விதிமுறையாகும். சூரியனின் தேரிலுள்ள ஏழு குதிரைகளின் அம்சமாக அரசமரம் பூமியில் தோன்றியதென்பர். எனவே, மரத்தை எப்போதும் ஏழு முறை வலம் வர வேண்டும் உதய காலத்தில் பூஜிப்பது முக்கியம்.
மூலதோ பிரம்ஹரூபாய
மத்யதோ விஷ்ணுரூபிணே
ஆக்ரத சிவரூபாய
விருக்ஷராஜாயதே நம
– எனும் மந்திரத்தைக் கூறி அரச மரத்தை வணங்க வேண்டும்.
இந்து சமய நெறியில் வாழ்வோருக்கு அரச மரத்தை வலம் வருதல், அன்றாடக் கடமைகளில் ஒன்றாக விதிக்கப்பட்டுள்ளது. அமாவாசை அல்லது திங்கட்கிழமை அல்லது அமாசோம விரத காலங்களில் அங்கப் பிரதட்சிணம் செய்வதும் நியதி. பாவங்கள், தோஷங்கள், நோய்கள், அகலவும் உடல்நலம் பெறவும் மக்கட்பேறு அடையவும், அரச மரத்தை வலம் வருவதலும், அரச மரத்தடியில் விநாயகர் அல்லது நாகர் பிரதிஷ்டை செய்து வழிபடுதலும் ஏற்றது.
திங்கட்கிழமையில் அமாவாசை திதியும் ஞாயிற்றுக்கிழமையில் சப்தமி திதியும்
செவ்வாய்க்கிழமையில் சதுர்த்தி திதியும் புதன் கிழமையில் அஷ்டமி திதியும்
சேர்ந்து வரக்கூடிய நாட்கள் அரச மரத்தை வலம் வர உகந்த நாட்களாகும்.
ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு மரம் குறிப்பிடப்பட்டிருப்பினும் அனைத்து தெய்வங்களுக்கும் விருப்பமானது அரசமரம் ஒன்றே.
எத்தனை முறை சுற்றினால் என்னென்ன பலன்?
7 முறை சுற்றினால் இஷ்ட சித்தி.
9 முறை சுற்றினால் ஜெயம்.
11 முறை சுற்றினால் நற்குணம் உண்டாகும்.
15 முறை சுற்றினால் ஆயுள் அபிவிருத்தி.
108 முறை சுற்றினால் தனப்ராப்தி, தனவிருத்தி.
1008 முறை சுற்றினால் அஸ்வ மேத யாக பலன்.
அரச மரத்தைச் சுற்றும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்
குழந்தை இல்லாத பெண்மணிகள் அரசமரத்தைச் சுற்றி வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு சில விதிமுறைகள் உள்ளன.
* அரச மரத்தை வலம் வரும்போது வேகமாக நடக்கக் கூடாது. சரியான இடைவெளி விட்டு மெதுவாக நடக்க வேண்டும்.
* கைகளை ஆட்டாமல் உடலோடு ஒட்டி வைத்துக் கொண்டோ, வணங்கிக் கொண்டோ சுற்றிவர வேண்டும்.
* சக பெண்களுடன் பேசிக் கொண்டே சுற்றக்கூடாது. இதற்குப் பதிலாக ஏதாவது ஒரு துதி பாடலை பாடி வர வேண்டும்.
* குறைந்த பட்சம் 7 முறை வலம் வர வேண்டும். அதிகபட்சமாக 108 முறை சுற்றி வரலாம்.
* சனிக் கிழமைகளில் அரச மரத்தை சுற்றுவது மிகவும் நல்லது சுற்றி முடிந்தபின் அரச மரத்தை கட்டிக்கொள்ள வேண்டும். வயிறு மரத்தின் மீது பட்டால் கர்ப்பம் தரிக்கும் என்பது நம்பிக்கை.
* அரசமரத்தை காலை வேலையில்தான் வலம் வர வேண்டும். மதிய வேளையில் நிச்சயமாக வலம் வரக் கூடாது.
* ஆண்கள் தினமும் 108 முறை வீதம் 3 ஆண்டுகள் தொடர்ந்து வலம் வந்தால் கடன் தொல்லை நீங்கும். பய உணர்ச்சி அற்றுவிடும். தீராத நோய்கள் தீர்ந்து விடும். வியாபாரத்தில் லாபம் கிட்டும். உத்தியோக வாய்ப்பு கிடைக்கும்.

Tags : GRACE ,Vemba ,Nepba Tree ,
× RELATED செவ்வாய் தோஷமா?