×

அதிகரித்த நஷ்டம்… பெட்ரோல், டீசல் விலையை தினசரி மாற்றியமைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு…

டெல்லி: பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் தினசரி மாற்றங்கள் செய்ய எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் திடீரென உயர்ந்துள்ளதன் காரணமாக அரசுக்கு சொந்தமான இந்திய எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (OMCs) பெட்ரோலில் லிட்டருக்கு சுமார் ரூ.18 மற்றும் டீசலில் லிட்டருக்கு ரூ.35 என்ற அளவில் இழப்புகளை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த இழப்புகளை ஈடுகட்ட அவ்வப்போது பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையை உயர்த்துவதை விட தினசரி விலையில் மாற்றங்களை செய்ய இந்திய எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளாக (ஏப்ரல் 2022 முதல் மே 2026 வரை) சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்தபோதும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் நிலையாக வைக்கப்பட்டிருந்தது. மத்திய அரசின் வரிக்குறைப்பு மற்றும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தைத் தாங்களாகவே ஏற்றுக் கொண்டதுதான் இதற்கு முக்கியக் காரணம்.

ரஷ்யா – உக்ரைன் போர் மற்றும் சமீபத்திய மத்திய கிழக்கு பிரச்சினைகளால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 முதல் 110 டாலருக்கும் மேலாக எகிறியது. ஆனால், இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் விலையை உயர்த்தாமல் நஷ்டத்தை ஏற்று கொண்டன. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு கட்டத்தில் தினசரி சுமார் ரூ.1,000 கோடி முதல் ரூ.1,600 கோடி வரை இழப்பு ஏற்பட்டது.

கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மே 15, 2026 அன்று முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 வரை அதிரடியாக உயர்த்தப்பட்டது. இந்த சூழலில் கட்டுப்படுத்த முடியாத தினசரி நஷ்டம், கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட முக்கிய காரணங்களால் தினசரி அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் தினசரி மாற்றங்கள் செய்ய எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

 

Tags : Delhi ,
× RELATED வரதட்சணை கொடுமையால் நடிகை மரணம்;...