திருச்சுழி: திருச்சுழி அருகே எம்.சாண்ட், உடை கல் கடத்திய தவெக நிர்வாகிகளின் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சுற்றுவட்டார பகுதிகளில் உரிய அனுமதி சீட்டு இன்றி கனிம வளங்கள் கடத்தப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அருப்புக்கோட்டை மண்டல துணை வட்டாட்சியர்கள் சிவனாண்டி, முனியாண்டி தலைமையிலான வருவாய்த் துறையினர் திருச்சுழி அருகே புலியூரான் மற்றும் மேலக்கண்டமங்கலம் பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது புலியூரான் பகுதியில் எம்.சாண்ட் ஏற்றி வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். உரிய அனுமதி சீட்டு இன்றி எம்.சாண்ட் கடத்தி வந்தது தெரியவந்தது. அதேபோல் மேலக்கண்டமங்கலம் பகுதியில் சென்ற மற்றொரு டாரஸ் லாரியையும் நிறுத்தி சோதனை செய்தபோது, உடைகல் கடத்தியது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இரு டாரஸ் லாரிகளையும் வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து திருச்சுழி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள், முதுகுளத்தூர் முன்னாள் எம்எல்ஏ முருகனின் மகன் கார்த்திக், அமமுக முன்னாள் கமுதி ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம் ஆகியோருக்கு சொந்தமானவை என கூறப்படுகிறது.
இவர்கள் கடந்த வாரம் அமமுகவில் இருந்து விலகி, நிதியமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு கல்லூரணி பகுதியில் கல்குவாரியும், குருணைக்குளம் பகுதியில் கிரஷரும் செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக மண்டல துணை வட்டாட்சியர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், திருச்சுழி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
