×

சென்னை மெட்ரோ – மிக கடினமான பகுதியில் சுரங்கம் தோண்டும் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்த “சேர்வராயன்”

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3-ல் சேர்வராயன் என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக பணியை முடித்து மூலக்கடை மெட்ரோ நிலையத்தை வந்தடைந்தது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமானது கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிட்டு, அதற்கான பணிகளை முழுவீச்சில் செய்து வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 3-ல் மாதவரம் பால் பண்ணை முதல் கெல்லீஸ் வரையிலான முதல் 9 கி.மீ. நீளத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணியை டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்த பணிக்காக மொத்தம் 7 சுரங்கப்பாதை தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், ‘சேர்வராயன்’ என்று பெயரிடப்பட்ட சுரங்கப்பாதை தோண்டும் இயந்திரம், மாதவரம் நெடுஞ்சாலை ரயில் நிலையத்திலிருந்து மூலக்கடை ரயில் நிலையம் வரையிலான (கீழ் வழித்தடம் – Down line) பகுதியில் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கியது. மொத்தம் 824.6 மீட்டர் நீளத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணியை முடித்து மூலக்கடை மெட்ரோ நிலையத்தை வந்தடைந்தது. இது TU01 ஒப்பந்தத்தின் கீழ் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒன்பதாவது சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் வெற்றிகரமான பணி நிறைவு ஆகும்.

ஒட்டுமொத்தமாக, சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2-ல் இதுவரை 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் தனது பணியை முடித்து இலக்குகளை வெற்றிகரமாக எட்டியுள்ளன. இந்தத் திட்டத்தின் TU-01 ஒப்பந்தப் பிரிவின் கீழ் உள்ள மாதவரம் நெடுஞ்சாலை மற்றும் மூலக்கடைக்கு இடையேயான சுரங்கப்பாதை பகுதி, பல்வேறு பெரும் சவால்கள் நிறைந்த மிகக் கடினமான ஒரு பகுதியாகும். உதாரணமாக, சேர்வாரயன் சுரங்கம் தோண்டும் இயந்திரம் பக்கிங்காம் கால்வாய்க்கு அடியிலும், எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைக்கு அடியிலும், 14-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகளைக் (Borewells) கடந்தும் சுரங்கம் அமைக்கும் பணியை வெற்றிகரமாக முடித்தது.

இதனால் பொதுமக்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் அல்லது தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்படாத வண்ணம், அவர்களுக்கு மாற்றுத் தண்ணீர் வசதிகளை உடனுக்குடன் செய்து கொடுத்து இந்தச் சவாலான பணி வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. சுரங்கப்பாதை அமைக்கும் பணி முழுவதும், அனுமதிக்கப்பட்ட குறைந்தபட்ச நில அதிர்வு மற்றும் மாற்றங்களுக்குள் மிகச் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டது. மேலும், இப்பணி நடைபெற்ற காலம் முழுவதும் விரிவான கண்காணிப்புக் கருவிகள் மூலம் தொடர் கண்காணிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிகழ்வை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் மற்றும் பொது ஆலோசகர் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தளத்தில் இருந்து பார்வையிட்டனர்.

 

Tags : Chennai Metro ,Servarayan ,Chennai ,Muhalkadai Metro Station ,Chennai Metro Railway Company ,
× RELATED நெல்லை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் முழுநேர...