×

நெசவாளர்களின் நூல் பாவுவை சேதப்படுத்தி தவெக நிர்வாகி அட்டூழியம்

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே நெசவாளர்கள் கட்டியிருந்த நூல் பாவுவை தவெக நிர்வாகி சேதப்படுத்தியுள்ளார். அம்பாசமுத்திரம் அருகே உள்ள தெற்கு வீரவநல்லூர் சக்தி விநாயகர் தெருவில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட சௌராஷ்டிரா குடும்பத்தினர் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர்.

இவர்கள் பிரதான தொழிலாக தலைமுறை தலைமுறையாக கைகளினால் சேலைகள் போன்றவற்றை நெசவு செய்து வடிவமைத்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், தவெக நிர்வாகி சிவா என்பவர் நெசவாளர்கள் குடியிருக்கும் இதே பகுதியில் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

அப்பகுதியை சேர்ந்த அசோக் குமார் என்பவர் தனது நெசவுதறியில் வேலையை தொடங்குவதற்காக பாவு முறையில் நூலை வெயிலில் காயவைத்துள்ளார். அப்போது அந்த வழியாக காரில் வந்த தவெக நிர்வாகி பாவு வைத்திருந்த நூலின் மீது காரை ஏற்றி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் சற்று நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்ட சூழ்நிலையில் இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வீரவநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இந்த தவெக நிர்வாகி கடந்த நான்கு மாதங்களில் இது போல இரண்டு முறை நெசவாளர்கள் வைத்திருந்த நூல் பாவுவை சேதப்படுத்தியதாக கூறியுள்ளனர். இதுகுறித்து தவெக தரப்பில் கூறுகையில் அந்த தவெக நிர்வாகிக்கு கண்ணில் லேசாக காயம் ஏற்பட்டுள்ளது இதனால் எதிர்பாராதவிதமாக இந்த விபத்து நடந்துள்ளது, இதற்குரிய இழப்பீடு வழங்கப்படும் என்று கூறியுள்ளனர்.

Tags : Thirunelveli ,Thaveka ,Veeravanallur ,Nellai district ,Sakthi Vinayagar Street, South Veeravanallur ,Ambasamudram ,
× RELATED நெல்லை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் முழுநேர...