திண்டுக்கல்: தமிழகத்தில் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக கொடைக்கானலில் உள்ள பிரபலமான சுற்றுலா தளங்கள் மழைநீரால் வெள்ளக்காடாக காட்சியளித்தன.
திடீரென கனமழை பெய்ததால் சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அவதி அடைந்தனர். கொடைக்கானலில் இந்த மாத துவக்கம் முதலே தொடர்ந்து மழை பெய்து வருவதால், பிரையன்ட் பூங்கா மற்றும் ரோஜா பூங்காவில் கோடை விழாவிற்காக பூக்க வைக்கப்பட்டுள்ள மலர்கள் உதிரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தோட்டக்கலைத் துறையினர் பாலிதீன் போர்வைகள் மூலம் மலர்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கொடைக்கானலில் மழை பெய்த போதிலும், நட்சத்திர ஏரி போன்ற பிரபல டூரிஸ்ட் ஸ்பாட்களில் சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தபடியே படகு சவாரி செய்து இதமான சூழலை ரசித்தது குறிப்பிடத்தக்கது.
