×

செல்வமும் செழிப்பும் சேர்க்கும் கோமாதா!

பசுவிற்கு காட்சி கொடுத்த ஈசன்
புதுக்கோட்டை – திருச்சி சாலையில் புதுக்கோட்டை மாமன்னர் நிறுவிய கோகர்ணேஸ்வர் உடனுறை பிரகதாம்பாள் ஆலயம் கம்பீரமாக நிற்கிறது. இத்தலத்து இறைவி பசுவாக பிறந்து தன் காதில் நீர் எடுத்து வந்து அன்றாடம் இறைவனுக்கு அபிஷேகம் செய்து மோட்சம் அடைந்ததாக புராண வரலாறு சொல்கிறது. இவ்வாலயம் சென்று வணங்கு வோர்க்கு ஆன்மிகத்தில் தெளிவும், தொடர்பும் ஏற்படுவதோடு, மறுபிறவி இல்லா மோட்சமும் கிட்டும் என்பது நம்பிக்கை. பசு தன் காதில் நீர் கொண்டு வந்து நித்தமும் அய்யனை அபிஷேகம் செய்து வந்ததால் கோ+கர்ணம் திருக்கோகர்ணம் என்று வழங்கப்பட்டு வருகின்றது. சிவனார், பசுவின் பக்தியை சோதிக்க எண்ணி புலி உருவில் வந்து மிரட்டியதாகவும், பசு கேட்டுக் கொண்டதற்கிணங்க, திருவேங்கடவாசல் என்ற இடத்தில் பசுவுக்கு சிவசக்தி சமேதராய் அவர் காட்சிக் கொடுத்திருக்கிறார்.
கால்நடைகளை காக்கும் தலம்
திருஆவூர் தலம், கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ளது. டவுன் பஸ் வசதியுமிருக்கிறது. இறைவன்: பசுபதீஸ்வரர். இறைவி: மங்கள நாயகி. இந்திரனும், பசுக்களும் பூஜித்த தலமிது. பசுக்களுக்கு இறைவன் வரமளித்த புண்ணிய பூமி. கால்நடைகளுக்கு ஏற்படும் கொடிய நோய் எதுவாக இருந்தாலும் இங்கு வந்து வேண்டிக் கொண்டால், அவற்றுக்கு விரைவில் குணமாகி விடுவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
கபிலேஸ்வரர்
கபிலா என்பதும் பசுக்களுக்கு ஒரு பெயராகும். நீலம் கலந்த கருமை படர்ந்து பொன்வண்ணத்துடன் மின்னும் நிறம் கொண்ட பசுவே கபிலா எனப்படும் இதனைக் காராம் பசு எனவும் அழைப்பர். இதன்மடி பருத்ததாகவும் நிறைய பாலைப் பொழிவதாகவும் இருக்கும். இத்தகைய கபிலநிறப் பசுவின் பாலே சிவபூசைக்கு உரியதாகும். இப்போது இத்தகைய பசுக்கள் கிடைக்காததால் எல்லா நிறப் பசுக்களின் பாலையும் பயன்படுத்துகின்றோம். சிவபூஜையில் ஓர் அங்கமாகக் கபிலபூசை எனப்படும் பசு பூசையும் இடம் பெறுகின்றது. கபிலையால் பூசிக்கப்படுவதால் இறைவன் கபிலேஸ்வரர் என்று அழைக்கப்படுகின்றார். திருப்பதி மலையடிவாரத்தில் கபிலேஸ்வரர் ஆலயமும் கபில தீர்த்தமும் அமைந்துள்ளதைக் காணலாம். பசுக்களை வளர்ந்த முனிவர்கள் பலர் கபிலமுனி என்று பெயர் பெற்றி ருந்ததைக் காண்கிறோம்.
ஆதீண்டு குற்றி
பசுக்கள், தன் உடலில் தோன்றும் தினவை உராய்ந்து தீர்த்துக் கொள்ள பசுக்கள் மேயும் மந்தைவெளியில் ஒரு நெடுங்கல்லை நட்டுவைப்பர். இது ‘‘ஆதீண்டு குற்றி’’ அல்லது ‘‘ஆதீண்டும் கல்’’ எனப்பட்டது. பசுவின் வசதிக்காக இவ்வாறு கல் நடுவது முப்பத்தியிரண்டு சிவதருமங்களில் ஒன்றாகும். இதில் சிவபெருமான் நீங்காது உறைவார் என்று நம்பப்படுகிறது.
பசுக்களும் அரச மரமும்
பசுக்கள், சிவபெருமானை வழிபட்ட தலங்களில் எல்லாம் அரசமரமே தலமரமாக விளங்குவது குறிப்பிடத்தக்கதாகும். எடுத்துக் காட்டாக, பசுக்கள் பூஜித்த திருவாவடுதுறையில் ‘‘படர் அரசு தலமரமாக விளங்குகிறது. இதனால் அதற்கு அரசவனம் என்பது பெயராயிற்று. இது போலவே ஆவூரிலும் அரச மரமே தலமரமாகும். யாவுக்கும் மேலாக காமதேனு 32 சிவலிங்கங்களை அமைத்து வழிபட்ட கொங்கு மண்டலத்தில் உள்ள ஒவ்வொரு சிவாலயத்திலும் அரசமரங்கள் சிறப்புடன் கொண்டாடப்படுவதும், அதன் தலைமையிடமான பேரூர், அரசம்பலம் என்றழைக்கப்படுவதும் இங்கு எண்ணத்தக்கதாகும். இதன் மூலம் அரசமரம் சிவபெருமானாகவும் பசுக்கள் பார்வதி தேவியாகவும் போற்றி வணங்கப்படும் நிலையை உய்த்துணர முடிகிறது.
பசுக்களின் தாயகமான திருஆமாத்தூர்
பசுக்கள் மிகவும் சாதுவாக இருப்பதால் விளையாட்டாக அவற்றைப் பலரும் துன்புறுத்தினர். இதனால் வருத்தமுற்ற பசுக்கள் தம்மைப் பகைவரிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள திருஆமாத்தூர் எனும் தலத்தில் ஈசனை வழிபட்டன. சிவபெருமான் அவற்றிற்கு எதிரிகளைத் தாக்கி ஓட்டும் வகையில் கூரிய கொம்பையும் வலிய குளம்புகளையும் கொடுத்தார். அதனால் இத்தலம் வடமொழியில் பசுக்களின் தாய்வீடு எனும் பொருளில் ‘‘கோமாத்ருபுரம்’’ என்றழைக்கப்படுகின்றது. இத்தலம் தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ள விழுப்புரத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
பசுவந்தணை கயிலாயநாதர்
நெல்லை மாவட்டத்தில் கோவில்பட்டிக்கு அருகில் உள்ள தலம் பசுவந்தணை என்பதாகும். அம்பிகை பசு வடிவில் கொண்டு வழிபட்ட தலங்களில் ஒன்று பந்தணைநல்லூராகும். அது போல் பசு வந்து அணைந்து சிவலிங்கத்தை வெளிப்படுத்திய தலம் பசுவந்தணை என்பதாகும். இங்கு பெரிய புகழ்பெற்ற கயிலாயநாதர் ஆலயம் உள்ளது. சிறப்பு பூசைகளுடன் தேரோடும் திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. ஒரு சமயம், தன் மந்தையிலுள்ள பசு ஓரிடத்தில் உச்சி வேளையில் பால் சொரிவதை அறிந்த பண்ணையாளர் அவ்விடத்தை அகழ்ந்தபோது சிவலிங்கம் வௌிப்பட்டுள்ளது. இவருக்கு கயிலாயநாதர் என்று பெயர்சூட்டி பெரிய ஆலயம் அமைத்துள்ளனர். அம்பிகையின் பெயர் ஆனந்தவல்லி. இது புற்று நோயைத் தீர்க்கும் தலம் என்கின்றனர். இங்கு சுப்பா நாயக்கர் என்பவர் வழிபட்டு இழந்த கண் பார்வையைப் பெற்றார் என்று இக்கோயில் வரலாறு கூறுகிறது.

Tags : Komata ,Prakadambala Shrine ,Gokarneswar ,Pudukkot Maman ,Eisen Pudukkottai ,Trichy Road ,
× RELATED உலகத்தை அளந்த உலகளந்த பெருமாளின் அருகில் அனுமன்!